இனிதான் சம்பவமே ஆரம்பம்.. சுள்ளான் மதன் கொலைக்குப் பின் அடுத்த ரத்தக் களறி? அடங்காத அக்னி பிரதர்ஸ்
சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் சமீபத்தில் நடந்த சரித்திரப் பதிவேடு குற்றவாளியான 'சுள்ளான் மதன்' படுகொலை, ஒட்டுமொத்த தமிழகத்தையே அதிரவைத்துள்ளது. ஆனால், இந்த படுகொலையோடு மோதல் முடிந்துவிடவில்லை; மாறாக, இது அடுத்த கட்ட ரத்தக் களறிக்கான ஆரம்பம்தான் என்று உளவுத்துறையும் கள நிலவரங்களும் எச்சரிக்கின்றன. 'அக்னி பிரதர்ஸ்', 'சுள்ளான் பாய்ஸ்' போன்ற பெயர்களில் இயங்கும் இன்ஸ்டாகிராம் பக்கங்கள் வெளியிட்டு வரும் அடுத்தடுத்த எச்சரிக்கை வீடியோக்களால், சிவகங்கை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பதற்றம் நாளுக்கு நாள் எகிறி வருகிறது.

கரும்புத் தோட்டத்தில் முடிந்த வாழ்க்கை
கடந்த அக்டோபர் 18 அன்று, சிவகங்கை அருகே உள்ள ஒக்கூர் பகுதியில் சுள்ளான் மதன் (26) இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது, 11 பேர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் அவரை சுற்றி வளைத்தது. அவர்களிடமிருந்து தப்பிக்க அருகில் இருந்த கரும்புத் தோட்டத்திற்குள் மதன் தலைதெறிக்க ஓடினார். விடாமல் விரட்டிச் சென்ற அந்தக் கும்பல், அவரை கொடூரமாக வெட்டி சாய்த்துவிட்டு தப்பியோடியது.
சம்பவம் நடந்த 12 மணி நேரத்திற்குள் பிரதீப் (26), பாலமுருகன் (19), பாபு (23) ஆகிய மூன்று பேரை கைது செய்த காவல்துறை, அடுத்தகட்ட விசாரணையில் சந்தோஷ், ஜெய மாணிக்கராஜ், முத்து சூர்யா, விக்னேஷ் என மேலும் 4 பேரைக் கைது செய்தது. இதன்மூலம் கைது எண்ணிக்கை ஏழாக உயர்ந்தாலும், தலைமறைவாக உள்ள மற்றவர்களைப் பிடிக்க 6 தனிப்படைகள் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றன.
பழிக்குப் பழியாக உருவான 'அக்னி பிரதர்ஸ்' வரலாறு
இந்த மோதலின் வேர் நேற்று இன்று உருவானதல்ல. கடந்த 2019-ல் முனீஸ் என்பவர் கொல்லப்பட்டதில் தொடங்கி, அதற்குப் பழிவாங்கலாக 2021-ல் வழக்கறிஞர் அக்னிராஜ் என்பவர் வெட்டிக் கொல்லப்பட்டார். அக்னிராஜ் மறைவுக்குப் பின், அவரது நண்பர்கள் 'அக்னி பிரதர்ஸ்' என்ற பெயரில் இன்ஸ்டாகிராம் பக்கத்தைத் தொடங்கினர்.
அதில் "யாருக்கு அடுத்து மரணம்?" என்று பெயர்களைக் குறிப்பிட்டு ரீல்ஸ் போடுவதும், அதன் பின்னரே திட்டமிட்டு அடுத்தடுத்து நான்கு பேரைத் தீர்த்துக்கட்டியதும் நடந்தேறியது. அதே பாணியில்தான், 2024 மஞ்சுவிரட்டு தகராறில் ஜெயசூர்யா, சுபாஷ் என்ற இரு சகோதரர்கள் கொல்லப்பட்ட இரட்டைக் கொலை வழக்கிலும் இன்ஸ்டாகிராம் மூலமாகவே சதித்திட்டம் தீட்டப்பட்டதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. இந்தக் கொலையில் முக்கியக் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டு, குண்டர் சட்டத்தில் சிறையில் இருந்த சுள்ளான் மதன், அக்டோபர் 7-ல் ஜாமீனில் வெளியே வந்த 11 நாட்களிலேயே எதிர் தரப்பால் குறிவைத்து முடிக்கப்பட்டார்.
"பார்ட்-1 ஓவர்... அடுத்தது பார்ட்-2": எகிறும் இன்ஸ்டா போர்க்களம்
மதன் கொல்லப்பட்ட சில நிமிடங்களிலேயே, எதிர் தரப்பினர் அவரது உடலின் படங்களை ஒரு "வெற்றிக் கோப்பை" போல இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து "கேம் ஓவர்" என்றும், "பார்ட்-1 முடிந்தது, அடுத்து பார்ட்-2 ஆரம்பம்" என்றும் பதிவிட்டனர். இது மதனுடன் இரட்டைக் கொலையில் தொடர்புடைய மற்றொரு நபரை குறிவைக்கும் நேரடி எச்சரிக்கை என்று சொல்லப்படுகிறது.
மறுபுறம், மதனின் தீவிர ஆதரவாளர்கள் மற்றும் 'சுள்ளான் பாய்ஸ்' ஆதரவு பக்கங்கள் கொந்தளித்துப் போயுள்ளன. "கொலைகள் தொடரும், தலைகள் உருளும்", "விரைவில் அனைத்து தலைகளும் சிதறும்", "இனிமேதான் சம்பவமே ஆரம்பம்" என்று சினிமா வசனங்களை பின்னணியாக வைத்து ஆக்ரோஷமான ரீல்ஸ்களை பதிவேற்றி வருகின்றனர். மேலும், மதனின் கொலைக்கு காரணமானவர்கள் என்று கூறி சில இளைஞர்களின் படங்களை வட்டமிட்டு, "உங்களை சும்மா விடமாட்டோம்" என பகிரங்கமாக எச்சரித்துள்ளனர்.
இன்னும் கொலைகள் நடக்குமா? வட்டாரங்கள் சொல்வது என்ன?
சமூக வலைதளங்களில் ஒருவரை ஒருவர் சீண்டிப் பார்ப்பதும், தங்கள் ஆதிக்கத்தைக் காட்டிக் கொள்ள வன்முறையை நியாயப்படுத்துவதும் சிவகங்கையின் சில கிராமப்புற இளைஞர்களிடையே ஒரு தவறான டிரெண்டாகவே மாறிவிட்டது. "நாங்கள் போட்ட சபதத்தை முடிப்போம்" என அக்னி பிரதர்ஸ் தரப்பும், "எங்கள் தலைவன் ரத்தத்திற்குப் பழி வாங்குவோம்" என சுள்ளான் பாய்ஸ் தரப்பும் கங்கணம் கட்டிக்கொண்டு அலைவதால், அடுத்தடுத்து மேலும் சில பழிவாங்கல் கொலைகள் அரங்கேறக்கூடும் என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் நிலவுகிறது.
குறிப்பாக, சிறையிலிருந்து வெளியே வரும் நபர்கள் மற்றும் ஜாமீனில் இருக்கும் கூட்டாளிகளை நோட்டமிட்டு, அவர்களின் நடமாட்டங்களை இன்ஸ்டாகிராம் ரகசிய குழுக்கள் மூலம் கண்காணித்து தாக்குதல் நடத்தும் பாணி தொடர்ந்து கொண்டிருக்கிறது.
காவல்துறையின் 'சைபர் வேட்டை' மற்றும் கடும் எச்சரிக்கை
சமூக வலைதள யுத்தத்தால் மோதல் கிராமங்களுக்குள் பரவுவதைத் தடுக்க சிவகங்கை மாவட்ட காவல்துறை அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொலை மிரட்டல் விடுத்தும், வன்முறையைத் தூண்டும் வகையிலும் செயல்பட்ட 36 இன்ஸ்டாகிராம் மற்றும் முகநூல் கணக்குகளை சைபர் கிரைம் பிரிவு முடக்கியுள்ளது. மேலும், அமைதியைக் குலைக்கும் பதிவுகளை வெளியிடுவோர் மீது கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படும் என்று எஸ்.பி எச்சரித்துள்ளார்.
கைபேசியில் ரீல்ஸ் போட்டு "கெத்து" காட்ட நினைக்கும் இளைஞர்கள், கடைசியில் தங்கள் வாழ்க்கையையும், எதிர்காலத்தையும், குடும்பத்தின் நிம்மதியையும் இழந்து கம்பி எண்ணும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். சிவகங்கையில் பழிவாங்கும் கொலை வெறிக்கு முற்றுப்புள்ளி வைக்க காவல்துறை மேலும் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.


Click it and Unblock the Notifications
