"பேசுவதை எல்லாம் ஒட்டு கேக்குறாங்க.. இதனால நான் செல்போனை யூஸ் பண்றதே இல்லை.." ஹெச்.ராஜா பகீர் புகார்
சிவகங்கை: தனது செல்போன் உரையாடல்கள் அனைத்தும் ஒட்டுக் கேட்கப்படுவதாக பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி லோக்சபா தேர்தல் நடந்து முடிந்தது. இந்த வாக்குப்பதிவுக்கு சில நாட்களுக்கு முன்னால் தான் அதிமுக தலைவர்கள் சிலர் தங்கள் செல்போன் உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்படுவதாகக் குற்றஞ்சாட்டினர்.

இது தொடர்பாக அவர்கள் தேர்தல் ஆணையத்திலும் புகார் அளித்தனர். இதற்கிடையே தனது செல்போன் உரையாடல்களும் ஒட்டுக் கேட்கப்படுவதாக பாஜக மூத்த தலைவர் ஹெச் ராஜா பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
மோடி தவறாக பேசவில்லை: இது தொடர்பாக சிவகங்கையில் செய்தியாளர்களிடம் பேசிய ஹெச் ராஜா, "சிறுபான்மையினரைக் கவர வேண்டும் என்பதற்காகப் பெரும்பான்மையினரை வஞ்சிக்கும் விதமாகக் காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையை உருவாக்கி உள்ளது. பிரதமர் மோடி ராஜஸ்தானில் பேசியதை நீங்கள் கேட்டீர்களா. அவர் ஒரு முறை கூட முஸ்லீம் என்ற வார்த்தையை பயன்படுத்தவில்லை.
எனவே, இதைத் தேர்தல் விதிமீறலாகக் கருதவே முடியாது. தேர்தல் விதிமீறல் இல்லாத நிலையில், தேர்தல் ஆணையத்தில் பிரதமர் மீது புகார் மனு கொடுத்தாலும் கூட இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வாய்ப்பே இல்லை. மத அடிப்படையில் மக்களைப் பிரிக்கக் காங்கிரஸ் முயல்கிறது. சிறுபான்மையினரை மத ரீதியாகவும் இந்துக்களைச் சாதி ரீதியாகவும் காங்கிரஸ் பிரிப்பதே அவர்கள் திட்டம். இதன் மூலம் ஆட்சியைப் பிடிக்க முடியும் என அவர்கள் நினைக்கிறார்கள்.
செல்போன் ஒட்டுக்கேட்பு: தமிழகத்தில் அரசியல் தலைவர்களின் செல்போன் உரையாடல்கள் ஒட்டுக் கேட்கும் புகாரில் உண்மை இருக்கிறது. கடந்த 20 நாட்களாக எனது செல்போன் உரையாடல்களைக் கூட ஒட்டுக் கேட்டு வருகிறார்கள். இதனால் நான் எனது செல்போனில் எந்தவொரு முக்கிய ஆலோசனைகளையும் செய்வதே கிடையாது" என்று கூறி பகீர் கிளப்பினார்.
கெஜ்ரிவால்: தொடர்ந்து தேசிய அரசியல் குறித்துப் பேசிய அவர், "ஆதாரம் இல்லாமல் எல்லாம் கெஜ்ரிவால் கைது செய்யப்படவில்லை. டெல்லி ஐகோர்ட் கூட கெஜ்ரிவால் மீதான புகாரில் உண்மை இருப்பதாகவே கூறியுள்ளது. அப்படி இருக்கும் போது அவருக்கு ஆதரவாக இங்கே தமிழக முதல்வர் ஸ்டாலின் பேசுவது ஏன்? டெல்லியில் இருந்து ஹைதராபாத் வரை புயலைக் கிளப்பிய இந்த மதுபான வழக்கு நிச்சயம் சென்னைக்கும் வரும். விரைவில் தமிழகத்திலும் இதில் பலர் மாட்டுவார்கள்.
தமிழ்நாட்டில் மதுபானம் உற்பத்தி செய்யும் அனைவரும் ஜூன் 4ஆம் தேதிக்குப் பிறகு நிச்சயம் சிறைக்குச் செல்வார்கள்.. முதல்வர், அமைச்சர்கள் என என்று யாராக இருந்தாலும் கவலை இல்லை. தவறு செய்பவர்கள் நிச்சம் தண்டிக்கப்படுவார்கள்.. அவ்வளவு தான்.. மணல் குவாரி முறைகேடு வழக்கைப் பொறுத்தவரை ஐஏஎஸ் அதிகாரிகளுக்குப் பல உண்மைகள் தெரியும். மேலும், உச்ச நீதிமன்றமும் கூட உத்தரவிட்டுள்ளது. அதன்படியே அவர்கள் அமலாக்கத் துறையிடம் ஆஜராகினர்" என்று கூறினார்.












Click it and Unblock the Notifications