சச்சினின் 37 ஆண்டுகால சாதனை காலியாகுதா! இந்திய அணியில் அறிமுகமாகும் 15 வயது வைபவ் சூர்யவன்ஷி?
மும்பை: அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி சார்பாக 15 வயதாகும் இளம் வீரரான வைபவ் சூர்யவன்ஷி களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் போட்டியில் வைபவ் சூர்யவன்ஷி களமிறக்கப்பட்டால், சச்சின் டெண்டுல்கரின் 37 ஆண்டு கால சாதனை முறியடிக்கப்படும். இதனால் வைபவ் சூர்யவன்ஷி மீதான எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கிறது.
இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மிக இளம் வயதில் சர்வதேசப் போட்டிகளில் அறிமுகமானவர் என்ற பெருமை சச்சின் டெண்டுல்கரையே சேரும். அவர் 1989-ல் தனது 16 வயது 205 நாட்களில் பாகிஸ்தானுக்கு எதிராகக் களம் இறங்கினார். தற்போது வெறும் 15 வயதே ஆகும் வைபவ் சூர்யவன்ஷி அறிமுகமானால், சச்சினின் சாதனையை முறியடித்து, இந்தியாவின் மிக இளம் வயது சர்வதேச கிரிக்கெட் வீரர் என்ற சரித்திரத்தை படைப்பார்.

டி20 சர்வதேச போட்டிகளில் வாஷிங்டன் சுந்தரின் 18 வயது 80 நாட்கள் என்ற சாதனையும் இதன் மூலம் தகர்க்கப்படும். டி20 உலகக் கோப்பை வெற்றிக்குப் பிறகு இந்திய டி20 அணியில் பெரிய அளவில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாடிய கேப்டன் சூர்யகுமார் யாதவ் உட்பட 7 பேர் இந்திய அணியில் இடம்பெறவில்லை.
உலகக் கோப்பையை வென்று தந்த சூர்யகுமார் யாதவின் மோசமான பேட்டிங் ஃபார்ம் காரணமாக, அவருக்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர் புதிய கேப்டனாகப் பொறுப்பேற்றுள்ளார். ஐபிஎல் தொடரின் போது ஏற்பட்ட காயம் காரணமாக வருண் சக்கரவர்த்தி மற்றும் நிதிஷ் குமார் ரெட்டி ஆகியோர் தொடரிலிருந்து விலகியுள்ளனர்.
வருண் சக்கரவர்த்திக்கு பதிலாக பிரசித் கிருஷ்ணாவும், நிதிஷ் குமார் ரெட்டிக்கு பதிலாக சூர்யான்ஷ் ஷெட்ஜேவும் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் அன்-கேப்டு வேகப்பந்து வீச்சாளர் பிரின்ஸ் யாதவ் என்பவருக்கும் அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனால் சீனியர் வீரர் முகமது சிராஜுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.
இந்த இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடர் பெல்ஃபாஸ்ட் நகரில் ஜூன் 26 மற்றும் 28 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. 15 வயது இளம் புயல் வைபவ் சூர்யவன்ஷியின் ஆட்டத்தை நேரில் காண லண்டன், பாரிஸ் போன்ற ஐரோப்பிய நாடுகளில் இருந்தெல்லாம் ரசிகர்கள் பெல்ஃபாஸ்ட் மைதானத்திற்கு படையெடுத்து வருவதால் டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்துள்ளன.












Click it and Unblock the Notifications