India VS Pakistan போட்டியை ஒளிபரப்பினால் அவ்வளவு தான்.. பார் - கிளப்புகளுக்கு ஆம்ஆத்மி வார்னிங்
டெல்லி: ஆசியகோப்பை தொடரில் இந்தியா - பாகிஸ்தான் (India VS Pakistan) அணிகள் இன்று மோதுகின்றனர். இன்றைய போட்டியை ஒளிபரப்பினால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று டெல்லியில் உள்ள பார் மற்றும் கிளப்புகளுக்கு ஆம்ஆத்மி கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆசியகோப்பைக்கான டி20 தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்றுள்ளன. அதன்படி 'ஏ' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட அணிகள் இடம்பெற்றுள்ளன. 'பி' பிரிவில் ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், இலங்கை, ஹாங்காங் அணிகள் இடம்பெற்றுள்ளன.

இந்தியா தனது முதல் போட்டியில் ஐக்கிய அரபு அமீரகத்தை எதிர்கொண்டு வெற்றி பெற்றது. இன்று 2வது போட்டியில் இந்தியா, பரம எதிரியான பாகிஸ்தானை எதிர்கொள்ள உள்ளது. இந்த போட்டி இன்று இரவு 8 மணிக்கு துபாய் மைதானத்தில் நடைபெற உள்ளது.
சமீபத்தில் பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நுழைந்து 26 பேரை சுட்டு கொன்றனர். அதன்பிறகு நம் நாட்டுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே சமீபத்தில் போர் நடந்தது. இந்த போரில் நம் நாடு பாகிஸ்தானை பந்தாடியது. மேலும் பாகிஸ்தான் உடனான அனைத்து உறவுகளையும் துண்டித்துள்ளது.
இப்படியான சூழலில் தான் இன்று இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டியை ரத்து செய்ய வேண்டும் உச்சநீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டது. அந்த மனு அவசர வழக்காக விசாரிக்க ஏற்கப்படவில்லை. அதேபோல் பல எதிர்க்கட்சிகளும் இந்த போட்டியை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியுள்ளன. உத்தவ் தாக்கரே சிவசேனா, காங்கிரஸ், ஆம்ஆத்மி என்று எதிர்க்கட்சிகள் இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கு அனுமதி வழங்கிய மத்திய அரசை கடுமையாக சாடி வருகின்றன.
மேலும் போட்டியை அனைத்து மக்களும் புறக்கணிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் கூறி வருகின்றனர். இந்நிலையில் ஆம்ஆத்மி கட்சியின் டெல்லி தலைவர் சவுரப் பரத்வாஜ் கூறுகையில், ‛‛இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிக்கு ஆம்ஆத்மி கட்சி முழுமையாக எதிர்ப்பு தெரிவிக்கிறது. இந்த பாகிஸ்தான் தான் சில நாட்களுக்கு முன்பு காஷ்மீரில் நுழைந்து டஜன் கணக்கான இந்தியர்களை கொன்றது. நம் அம்மாக்கள், சகோதரர்கள் கணவன்களை இழந்துள்ளனர்.
ஆனால் இப்போது மத்திய பாஜக அரசு பாகிஸ்தானுடன், இந்திய அணியை கிரிக்கெட் விளையாட அனுமதித்துள்ளது. இது மிகவும் அவமானமான செயல். ரத்தத்தையும், கிரிக்கெட்டையும் ஒரே கையில் வைத்து பார்க்க முடியாது. டெல்லியில் உள்ள பார் மற்றும் கிளப்புகள் இந்தியா - பாகிஸ்தான் போட்டியை ஒளிபரப்பக்கூடாது. மீறினால் அந்த பார், கிளப்புகளை கட்சியினர் அடையாளம் கண்டு மக்கள் அங்கு செல்வதை தடுப்பார்கள்'' என்று வார்னிங் செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications