19 ஆண்டுகளாக தொடரும் சோகம்.. நாக் அவுட் போட்டினாலே அலர்ஜி.. வரலாற்றை மாற்றுவாரா ரோஹித் சர்மா?
துபாய்: 2007 டி20 உலகக்கோப்பை தொடங்கி இதுவரை இந்திய அணி விளையாடியுள்ள ஐசிசி தொடர்களின் இறுதிப்போட்டிகளில் ஒருமுறை கூட ரோஹித் சர்மா அரைசதம் அடித்ததில்லை. 19 ஆண்டுகளாக தொடரும் சோகமான வரலாற்றை நியூசிலாந்து அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் ரோஹித் சர்மா மாற்றிக் காட்டுவாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்த்து இந்திய அணி விளையாடவுள்ளது. 12 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் போட்டி துபாய் மைதானத்தில் நடக்கவுள்ளதால், இந்திய அணி நிச்சயம் வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அணியின் பிளேயிங் லெவனை பொறுத்தவரை எந்த மாற்றமும் இருக்காது என்று நம்பலாம். மீண்டும் 4 ஸ்பின்னர்களுடன் இந்திய அணி களமிறங்கவே அதிக வாய்ப்புகள் உள்ளது. இதனிடையே இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் பேட்டிங் ஃபார்ம் ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதுவரை ஆடியுள்ள 4 போட்டிகளில் ஒரு அரைசதம் கூட ரோஹித் சர்மா அடிக்கவில்லை. சாதாரணமாக 20 பந்துகளுக்கு 30, 35 பந்துகளுக்கு 40 ரன்கள் என்று மட்டும் டி20 இன்னிங்ஸை போல் விளையாடி விக்கெட்டை பறிகொடுத்து சென்றுவிடுகிறார். பவர் பிளே ஓவர்களுக்கு பின் நிலைத்து நின்று விளையாட ரோஹித் சர்மா எந்த முயற்சிகளையும் மேற்கொள்வதில்லை.
ஏற்கனவே உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இப்படிதான் ரோஹித் சர்மா அதிரடியாக விளையாடுகிறே என்ற பெயரில் விக்கெட்டை பறிகொடுத்தது ஆட்டத்தையே முற்றிலும் மாற்றிவிட்டது. அதேபோல் ரோஹித் சர்மா விளையாட தொடங்கிய காலத்தில் இருந்தே நாக் அவுட் போட்டிகள் என்றாலே தடுமாறுவதை தொடர்ந்து வருகிறார்.
2007 டி20 உலகக்கோப்பையில் 16 பந்துகளில் 30 ரன்கள், 2013 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் 14 பந்துகளில் 9 ரன்கள், 2014 டி20 உலகக்கோப்பையில் 26 பந்துகளில் 29 ரன்கள், 2017 சாம்பியன்ஸ் டிராபியில் டக் அவுட், 2021 டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதியில் 34 மற்றும் 30 ரன்கள், 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதியில் 15 மற்றும் 43 ரன்கள், 2023 உலகக்கோப்பையில் 31 பந்துகளுக்கு 47 ரன்கள், 2024 டி20 உலகக்கோப்பையில் 5 பந்துகளுக்கு 9 ரன்களை சேர்த்துள்ளார்.
அதாவது 19 ஆண்டுகளாக ஐசிசி நாக் அவுட் போட்டிகளில் ரோஹித் சர்மா தொடர்ந்து தடுமாறி வந்துள்ளார். இதனை 2025 சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் மாற்றிக் காட்டுவாரா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது. இதுவரை ஐசிசி இறுதிப்போட்டியில் சதம் விளாசிய ஒரே இந்திய கேப்டன் சவுரவ் கங்குலி மட்டும்தான். 2000 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நியூசிலாந்துக்கு எதிராக கங்குலி 117 ரன்களை விளாசினார். அவரது ஆட்டத்தை போல் ரோஹித் சர்மா வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications