அந்த ஸ்பின்னரிடம் கவனமா இருங்க.. நியூசிலாந்து அணியின் ரியல் சீட் கோட்.. கோலிக்கு பறந்த எச்சரிக்கை!
துபாய்: 2024 டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் பும்ரா எப்படி Cheat Code ஆக செயல்பட்டாரோ, அதேபோல் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நியூசிலாந்து அணியின் cheat Code ஆக மிட்சன் சான்ட்னர் செயல்பட்டு வருவதாக பார்க்கப்படுகிறது. இதனால் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதுகின்றது. துபாய் மைதானத்தில் நடக்கவுள்ள இந்த போட்டியில் வெல்வதற்காக இரு அணிகளும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றன. துபாய் மைதானத்தில் ஏற்கனவே இந்த இரு அணிகளும் மோதிய போட்டியில் நியூசிலாந்து அணி தோல்வியை சந்தித்தது.

ஆனால் இம்முறை துபாய் பிட்ச்-க்கு ஏற்ப சிறப்பாக தயாராகி வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக நியூசிலாந்து அணியில் உள்ள ஸ்பின்னர்களின் எண்ணிக்கை இந்திய அணி ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துபாய் மைதானத்தில் கடந்த 2 போட்டிகளாகவே 4 ஸ்பின்னர்களுடன் இந்திய அணி விளையாடி வருகிறது.
குறிப்பாக வருண் சக்கரவர்த்தியின் வரவு, இந்திய அணியின் பலத்தை அதிகரித்துள்ளது. இந்த நிலையில் நியூசிலாந்து அணியும் 4 ஸ்பின்னர்களுடன் களமிறங்க உள்ளது தெரிய வந்துள்ளது. அதற்கான முன்னோட்டமாகவே தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டி அமைந்துள்ளது. அந்த போட்டியிலேயே கேப்டன் சான்ட்னர், பிரேஸ்வெல், கிளென் பிலிப்ஸ் மற்றும் ரச்சின் ரவீந்திரா ஆகிய 4 பேர் பவுலிங் செய்து இருக்கின்றனர்.
இதில் ரச்சின் ரவீந்திராவை தவிர்த்து மீதமுள்ள மூவரும் சிறந்த ஸ்பின்னர்கள். அதிலும் மிட்சல் சான்ட்னரின் பவுலிங் உச்சத்தில் இருக்கிறது. கடந்த போட்டியில் பவுமா, வான் டர் டூசன் மற்றும் கிளாசன் ஆகிய மூன்று முக்கிய விக்கெட்டுகளையும் மிட்சன் சான்ட்னர் கைப்பற்றி இருக்கிறார். கடந்த டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணிக்கு பும்ரா Cheat code ஆக கருதப்பட்டார்.
அவரது பவுலிங்கில் ரிஸ்க் எடுத்தாலே நிச்சயம் விக்கெட் என்ற நிலை இருந்தது. அதனால் பேட்ஸ்மேன்கள் அவரை அட்டாக் செய்யவே தயங்கினார்கள். இதனால் பும்ராவை Cheat Code என்று அஸ்வின் வர்ணித்தார். தற்போது அப்படியான Cheat code ஆக நியூசிலாந்து அணிக்கு மிட்சல் சான்ட்னர் இருக்கிறார். கேப்டன் பொறுப்பும் அவருக்கு கூடுதல் ஆக்ரோஷத்தை கொடுத்துள்ளது. அதேபோல் இடதுகை பந்துவீச்சாளரான ஓரூர்க் மற்றும் ஜேமிசன் ஆகிய இருவரும் இந்திய அணிக்கு மிகப்பெரிய சவாலை கொடுப்பார்கள்.
அண்மையில் நியூசிலாந்து அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் இந்திய அணி தோல்வியடைந்தது. அப்போதே நியூசிலாந்து அணி ஸ்பின்னர்களின் செயல்பாடுகள் ஆச்சரியமளிக்கும் வகையில் இருந்தது. இதனால் நாளை மறுநாள் நடக்கவுள்ள இறுதிப்போட்டியில் இந்திய அணி கூடுதல் எச்சரிக்கையுடன் நியூசிலாந்து ஸ்பின்னர்களை கையாள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications