ஸ்பின் சோக்.. அகீல் ஹொசைனை வைத்து பல்தான்ஸை பொட்டலம் கட்டிய ருதுராஜ்.. அவமானப்பட்ட மும்பை!
மும்பை: மும்பை அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணியின் நட்சத்திர ஸ்பின்னர் அகீல் ஹொசைன் 4 ஓவர்களில் 17 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து ஒரு மெய்டன் உட்பட 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். ஒரு கட்டத்தில் சிஎஸ்கே அணியின் கைகளுக்குள் ஆட்டம் வந்த பின், ஷார்ட் லெக் ஃபீல்டர் வைத்து அகீல் ஹொசைன் பவுலிங் செய்தது மும்பை அணிக்கு அவமானமாக மாறியது.
ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 207 ரன்களை குவித்தது. சிறப்பாக ஆடிய சஞ்சு சாம்சன் 54 பந்துகளில் 101 ரன்களை விளாசினார். இதையடுத்து 208 ரன்கள் என்ற இலக்குடன் மும்பை அணியின் டீ காக் - மாலேகர் கூட்டணி தொடக்கம் கொடுத்தது.

சிஎஸ்கே அணி தரப்பில் முதல் ஓவரை அகீல் ஹொசைன் வீசினார். இடதுகை பேட்ஸ்மேனான டீ காக் இருந்த போதும், அகீல் ஹொசைன் கைகளில் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பந்தை கொடுத்தது ஆச்சரியம் அளித்தது. ஆனால் 2வது பந்திலேயே டீ காக் சிக்ஸ் அடித்து மிரட்டினார். ஆனால் அந்த ஓவரின் கடைசி பந்தில் மாலேவரை டக் அவுட்டாகி அகீல் ஹொசைன் பதிலடி கொடுத்தார்.
இதன்பின் 3வது ஓவரை மீண்டும் வீச அகீல் ஹொசைன் வந்தார். அந்த ஓவரின் 3வது பந்தில் நமர் திர்ரை டக் அவுட்டாகி போல்ட் எடுத்தார். இதனால் மும்பை அணி 11 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதுமட்டுமல்லாமல் இந்த ஓவரை விக்கெட் மெய்டனாக வீச ஆச்சரியம் அளித்தார். அகீல் ஹொசைன் கொடுத்த அதிரடி தொடக்கத்தை பயன்படுத்தி சிஎஸ்கே அணி போட்டியை கட்டுப்பாட்டில் எடுத்தது.
இருப்பினும் திலக் வர்மா அட்டாக்கிங் ஷாட்களை விளையாட தொடங்கினார். இதனால் 11வது ஓவரை வீச அகீல் ஹொசைன் அழைக்கப்பட்டார். அந்த ஓவரின் 5வது பந்திலேயே திலக் வர்மா போல்டாகி 37 ரன்களில் வெளியேறினார். பின்னர் 14வது ஓவரின் முதல் பந்திலேயே சூர்யகுமார் யாதவின் விக்கெட்டையும் கைப்பற்றினார். இதன் மூலமாக சிஎஸ்கே அணியின் வெற்றியும் உறுதியானது.
4 ஓவர்களை வீசிய அகீல் ஹொசைன் ஒரு மெய்டன் உட்பட 17 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். மொத்தமாக 14 டாட் பால்களை வீசி இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் சிஎஸ்கே அணியின் ஆதிக்கம் தொடங்கிய பின், ஷார்ட் லெக் மற்றும் ஸ்லிப் திசையில் ஃபீல்டரை நிறுத்தி மும்பை அணியை அவமானப்படுத்தினார்.
கடந்த போட்டியில் அகீல் ஹொசைனை சிஎஸ்கே அணி பெஞ்ச் செய்தது. அதிகளவில் இடதுகை பேட்ஸ்மேன்கள் இருப்பதால், இடதுகை ஸ்பின்னரை சேர்க்க வேண்டாம் என்று முடிவு எடுத்து தவறை செய்தது. ஆனால் இன்றைய ஆட்டத்தில் திலக் வர்மா போன்ற தரமான இடதுகை பேட்ஸ்மேனையும் வீழ்த்தி அகீல் ஹொசைன் பதிலடி கொடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications