டெத் பவுலிங் சோலி முடிஞ்ச்.. காயத்தால் விலகிய நேதன் எல்லீஸ்.. இனி சிஎஸ்கேவை காப்பாற்ற யார் இருக்கா?
மும்பை: சிஎஸ்கே அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் நேதன் எல்லீஸ் காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகி இருக்கிறார். சிஎஸ்கே அணியின் டெத் பவுலிங் நேதன் எல்லீஸை நம்பியே இருந்த சூழலில் ரசிகர்கள் பலரும் புலம்ப தொடங்கியுள்ளனர். இதனால் சிஎஸ்கே அணி மாற்று வீரரை விரைவாக தேட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
சுமார் 2 சீசன்களுக்கு பின் சிஎஸ்கே அணி சிறப்பாக கட்டமைக்கப்பட்டிருப்பதாக ரசிகர்கள் உற்சாகமாக இருந்தனர். அதுமட்டுமல்லாமல் சஞ்சு சாம்சன், ஆயுஷ் மாத்ரே, ருதுராஜ் கெய்க்வாட், டிவால்ட் பிரெவிஸ், சிவம் துபே என்று பலமான பேட்டிங் வரிசையும் அமைந்திருக்கிறது. இதன் மூலமாக தோனிக்கு சிறப்பான ஃபேர்வெல்லை கொடுக்க முடியும் என்று ரசிகர்கள் நம்பினர்.

அதேபோல் பவுலிங்கிலும் நூர் அஹ்மத், நேதன் எல்லீஸ், கலீல் அஹ்மத், அன்சுல் கம்போஜ், பிரசாந்த் வீர், மேட் ஹென்றி ஆகியோரை கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது. இப்படியான சூழலில் திடீரென நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் நேதன் எல்லீஸ் காயம் காரணமாக, ஐபிஎல் தொடரில் இருந்தே விலகுவதாக அறிவித்திருக்கிறார். இதனை சிஎஸ்கே அணி நிர்வாகமும் உறுதி செய்துள்ளது.
நேதன் எல்லீஸை நம்பி தான் சிஎஸ்கே அணியின் டெத் பவுலிங் கட்டமைக்கப்பட்டிருந்தது. நேதன் எல்லீஸின் கட்டுக்கோப்பான பவுலிங் எதிரணிக்கு நிச்சயம் சிக்கலை உருவாக்கும் என்று பார்க்கப்பட்டது. அதேபோல் எல்லீஸின் ரோல் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது. அவரின் தேவை கட்டாயம் என்ற நிலை இருந்தது. அவருக்கான மாற்று வீரரை கூட சிஎஸ்கே அணி நிர்வாகம் எடுக்கவில்லை.
தற்போது காயம் காரணமாக எல்லீஸ் வெளியேறி இருப்பதால், அவருக்கான மாற்று வீரராக ஸ்பென்சர் ஜான்சன் ஒப்பந்தம் செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. 145கிமீ வேகத்தில் பவுலிங் செய்யக் கூடியவர் என்றாலும், டெத் பவுலிங்கில் சிறப்பாக செயல்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால் சிஎஸ்கே அணியின் கவனம் ராமகிருஷ்ணா கோஷ் பக்கம் திரும்பி இருக்கிறது.
ஏனென்றால் மகாராஷ்டிரா அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டரான ராமகிருஷ்ணா கோஷ் டெத் பவுலிங்கிலும் மிரட்டலாக பந்துவீசக் கூடியவர். இதனால் அவருக்கான ரோலினை முன்கூட்டியே கூறி தொடக்கம் முதலே அவரை தயார் செய்ய வேண்டும் என்ற குரல்கள் எழுந்துள்ளன. இதனால் ஃபிளமிங் மற்றும் ருதுராஜ் கூட்டணியின் திட்டம் என்ன என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications