சிஎஸ்கே அணியின் ஹர்திக் பாண்டியா.. 27 பந்துகளில் 64 ரன்கள்.. தெறிக்கவிட்ட ராமகிருஷ்ணா கோஷ்!
மும்பை: சிஎஸ்கே அணியின் இளம் ஆல்ரவுண்டரான ராமகிருஷ்ணா கோஷ் அடுத்த ஹர்திக் பாண்டியாவாக உருவாகி வருவதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். அதிலும் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் ஃபினிஷிங் ரோலில் வந்த ராமகிருஷ்ணா கோஷ், 27 பந்துகளில் 64 ரன்களை விளாசி தள்ளினார். அதன்பின் பவுலிங்கில் ஜெய்ஸ்வாலின் விக்கெட்டை வீழ்த்தி அசத்தி இருக்கிறார்.
ஐபிஎல் மினி ஏலத்திற்கு முன்பாக சிஎஸ்கே அணியால் ரீடெய்ன் செய்யப்பட்ட வீரர்களில் ஒருவர் ராமகிருஷ்ணா கோஷ். 27 வயதாகும் ராமகிருஷ்ணா கோஷ் வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர். சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் ஆடி வரும் மகாராஷ்டிரா அணிக்காக ஆடி வருபவர். இதனால் ராமகிருஷ்ணா கோஷ் ருதுராஜ் கெய்க்வாட்டின் நட்பில் இருப்பவராக பார்க்கப்பட்டார்.

ஆனால் விஜய் ஹசாரே தொடரில் ராமகிருஷ்ணா கோஷ் பீஸ்ட் மோடில் விளையாடி வருகிறார். ஏற்கனவே ஹிமாச்சல் பிரதேச அணிக்கு எதிரான போட்டியில் ராமகிருஷ்ணா கோஷ் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி வரலாறு படைத்தார். தொடர்ந்து சிக்கிம் மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு எதிரான போட்டியில் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இந்த விஜய் ஹசாரே தொடரில் மட்டும் 5 போட்டிகளில் விளையாடி 16 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். அதேபோல் பேட்டிங்கிலும் கில்லியாக செயல்பட்டு வருகிறார். வலிமையான மும்பை அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய மகாராஷ்டிரா அணி 50 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 366 ரன்களை குவித்தது.
இதில் நம்பர் 6 வீரராக களமிறங்கிய கோஷ், 27 பந்துகளில் 5 சிக்ஸ், 3 பவுண்டரி உட்பட 64 ரன்களை விளாசி தள்ளி இருக்கிறார். இதன் மூலமாக 5 இன்னிங்ஸில் ஆடி 2 அரைசதங்கள் உட்பட 204 ரன்களை குவித்துள்ளார். இவரின் ஸ்ட்ரைக் ரேட் மட்டும் 136ஆக உள்ளது. இதனால் ஜேமி ஓவர்டனுக்கு பதிலாக ராமகிருஷ்ணா கோஷை விளையாட வைக்க வேண்டும் என்று சிஎஸ்கே ரசிகர்கள் குரல் கொடுக்க தொடங்கியுள்ளனர்.
ஏற்கனவே ரவிச்சந்திரன் அஸ்வின் ராமகிருஷ்ணா கோஷ்க்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று பேசியுள்ளார். இதனால் சிஎஸ்கே அணியில் இன்னொரு ஹர்திக் பாண்டியா உருவாகி வருவதாக ரசிகர்கள் பேசத் தொடங்கி இருக்கின்றனர். 27 வயதை எட்டிவிட்ட சூழலில், ராமகிருஷ்ணா கோஷ் சரியான ஃபார்முக்கு வந்துள்ளதாகவும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications