நொய்டா கிங்ஸ் டூ சிஎஸ்கே.. ஜடேஜா இடத்தில் ஆடப்போகும் 20 வயது வீரர்.. யார் இந்த பிரசாந்த் வீர்?
அபுதாபி: சிஎஸ்கே அணி தரப்பில் டிரேட் செய்யப்பட்ட ஜாம்பவான் வீரரான ரவீந்திர ஜடேஜாவின் இடத்திற்காக 20 வயதே ஆன இளம் வீரரான பிரசாந்த் வீர் ரூ.14.20 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர் யுபிடி20 லீக் தொடரில் நொய்டா கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் சூழலில், தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட உள்ளார். இடதுகை ஸ்பின்னர் என்பதால், சிஎஸ்கே அணி பிடிவாதமாக பிரசாந்த் வீரை வாங்கி இருக்கிறது.
2026ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் அபுதாபியில் நடைபெற்று வருகிறது. இந்த மினி ஏலத்திற்கு முன்பாக சிஎஸ்கே அணி ஜாம்பவான் வீரரான ரவீந்திர ஜடேஜாவை ராஜஸ்தான் அணிக்கு டிரேட் செய்துவிட்டு, அந்த அணியில் இருந்து சஞ்சு சாம்சனை வாங்கியது. இதன் மூலமாக ஜடேஜாவின் இடத்தை நிரப்ப வேண்டிய சூழல் ஏற்பட்டது.

அதற்காக 20 வயதாகும் ஸ்பின் பவுலிங் ஆல்ரவுண்டரான பிரசாந்த் வீர் என்ற வீரரை ரூ.14.20 கோடிக்கு வாங்கி இருக்கிறது. இதன் மூலமாக ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு வாங்கப்பட்ட அன் கேப்ட் வீரர் என்ற சாதனையை பிரசாந்த் வீர் படைத்துள்ளார். இவர் ஜடேஜாவுக்கான மாற்று வீரராக செயல்பட உள்ளதாக பார்க்கப்படுகிறது.
20 வயதாகும் பிரசாந்த் வீர், உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர். இடது கை ஸ்பின்னர் மற்றும் இடதுகை பேட்ஸ்மேனான பிரசாந்த் வீர், யுபிடி20 லீக் தொடரில் எமர்ஜிங் வீரருக்கான விருதை பெற்றுள்ளார். யுபிடி20 லீக் தொடரில் நொய்டா சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடிய பிரசாந்த் வீர், இனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட உள்ளார்.
நொய்டா சூப்பர் கிங்ஸ் அணிக்காக 10 இன்னிங்ஸில் ஆடிய அவர், 320 ரன்களை குவித்துள்ளார். இவரின் பேட்டிங் சராசரி 64.00ஆகவும், ஸ்ட்ரைக் ரேட் 155.0 ஆகவும் இருக்கிறது. அதேபோல் பவுலிங்கில் 8 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். சிஎஸ்கே அணியின் தீவிர ரசிகரான பிரசாந்த் வீர், தோனியுடன் ஒரேயொரு சீசனில் விளையாட வேண்டும் என்று சில நாட்களுக்கு முன் வீடியோ வெளியிட்டிருந்தார்.
தற்போது பிரசாந்த் வீரின் கனவு நனவாகி இருக்கிறது. பிரசாந்த் வீரை வாங்க ராஜஸ்தான், ஐதராபாத் அணிகள் முட்டுக்கட்டையாக இருந்த போதும், சிஎஸ்கே அணி பிடிவாதமாக இருந்து ஒப்பந்தம் செய்துள்ளது. இதனால் சிஎஸ்கே அணியில் பிரசாந்த் வீருக்கு முக்கிய இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications