CSK vs KKR: கேப்டனாக தோனி சரி.. ருதுராஜ் இடத்தில் விளையாடப் போவது யார்? 2 வீரர்களுக்கு வாய்ப்பு!
சென்னை: கேகேஆர் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணியின் கேப்டனாக தோனி களமிறங்கவுள்ளார். ஆனால் காயமடைந்து வெளியேறி இருக்கும் நட்சத்திர வீரரான ருதுராஜ் கெய்க்வாட் இடத்தில் எந்த வீரர் களமிறங்குவார் என்ற சந்தேகம் ரசிகர்களிடையே எழுந்துள்ளது. இதனால் சிஎஸ்கே அணியின் ரசிகர்கள் யாரை தோனி தேர்வு செய்வார் என்று விவாதித்து வருகின்றனர்.
ஐபிஎல் தொடரின் 25வது லீக் போட்டியில் கேகேஆர் அணியை எதிர்த்து சிஎஸ்கே அணி விளையாடவுள்ளது. சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கவுள்ள இந்த போட்டியில் சிஎஸ்கே அணி வென்று வெற்றிப் பாதைக்கு திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் முழங்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறி இருக்கிறார்.

இதனால் சிஎஸ்கே அணியின் கேப்டனாக தோனி களமிறங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தோனி கேப்டனாக களமிறங்குவது சிஎஸ்கே அணியின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்தாலும், அணியில் உள்ள ஒரேயொரு நல்ல பேட்ஸ்மேனான ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக விலகி இருப்பது கூடுதல் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏனென்றால் ருதுராஜ் கெய்க்வாட் இடத்தை அவ்வளவு எளிதாக எந்த வீரராலும் நிரப்பிவிட முடியாது. சேப்பாக்கம் மைதானத்தில் ஸ்பின்னர்கள் மீது ஆதிக்கம் செலுத்தக் கூடிய சில வீரர்கள் ருதுராஜ் கெய்க்வாட் முதன்மையான வீரர். இதனால் ருதுராஜ் கெய்க்வாட் இடத்தில் எந்த வீரரை தோனி களமிறக்குவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
சிஎஸ்கே அணியின் பெஞ்சில் ராகுல் திரிப்பாட்டி, வன்ஷ் பேடி, ஷேக் ரஷீத், தீபக் ஹூடா உள்ளிட்ட 4 பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள். இதில் ஏற்கனவே ராகுல் திரிப்பாட்டி மற்றும் தீபக் ஹூடா ஆகிய இருவருமே மோசமான ஃபார்மில் இருக்கிறார்கள். இதனால் தோனி வன்ஷ் பேடிக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
அதேபோல் இந்த சீசனில் சில இளம் வீரர்களை தயார் செய்ய வேண்டிய பொறுப்பு தோனிக்கு அளிக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. ஏனென்றால் அடுத்த சீசனில் ருதுராஜ் கெய்க்வாட்-க்கு கூடுதல் உதவியாக இருக்க, இந்திய இளம் வீரர்களை சிஎஸ்கே அணி தயார் செய்ய வேண்டும். அதன்படி வன்ஷ் பேடி மற்றும் அன்சுல் கம்போஜ் ஆகியோரை தோனி தயார் செய்ய வாய்ப்புகள் இருப்பதாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications