கேஎல் ராகுல், சர்ஃபராஸ், ருதுராஜ், ஸ்ரேயாஸ் ஐயர்.. டெஸ்டில் விராட் கோலி இடத்தை நிரப்பப்போவது யார்?
மும்பை: இந்திய அணியின் ஜாம்பவான் வீரரான விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார். இன்னும் 2 ஆண்டுகள் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விராட் கோலி திடீரென ஓய்வை அறிவித்திருப்பது பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. இவரது இடத்தை எந்த வீரரை கொண்டு இந்திய அணி நிரப்பும் என்ற விவாதம் நடந்து வருகிறது.
இந்திய அணியின் ஜாம்பவான் வீரரான விராட் கோலி ஓய்வை அறிவித்துள்ளார். இதுதொடர்பாக விராட் கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், கடினமான முடிவாக இருந்தாலும், இதுவே சரியான முடிவாக தெரிகிறது என்று பதிவிட்டிருந்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்களை அடிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், எந்த சாதனையை நோக்கி ஓட முயற்சிக்காமல் விலகி இருக்கிறார்.

விராட் கோலி ஓய்வு?
இதன் காரணமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியின் தூதுவராக இருக்கப் போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இன்னொரு பக்கம் விராட் கோலியின் இடத்தை எந்த வீரரைக் கொண்டு இந்திய அணி நிரப்பும் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால் விராட் கோலியின் இடத்தை பிடிப்பதற்காக ஏராளமான வீரர்களை காத்திருக்கின்றனர்.
கேஎல் ராகுலுக்கு நிரந்தர இடம்?
குறிப்பாக கேஎல் ராகுல் நீண்ட காலமாக காத்திருக்கிறார். ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்பட்ட கேஎல் ராகுல், நிரந்த பேட்டிங் வரிசை கிடைக்காமல் தடுமாறி வருகிறார். தற்போது ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஓய்வை அறிவித்திருப்பது கேஎல் ராகுலுக்கான இடத்தை உறுதி செய்துள்ளது. இதன் மூலமாக அவர் தொடக்க வீரர் மற்றும் நம்பர் 4 ஆகிய 2 பேட்டிங் வரிசையிலும் விளையாட முடியும்.
சர்ஃபராஸ் கானின் சாதனை
இங்கிலாந்து மண்ணில் ஏற்கனவே தொடக்க வீரராக விளையாடி சாதித்திருப்பதால், கேஎல் ராகுல் தொடக்க வீரராகவே தொடர்வார் என்று பார்க்கப்படுகிறது. அதேபோல் சர்ஃபராஸ் கான் கடந்த ஓராண்டுக்கும் மேலாக நம்பர் 4 பேட்டிங் வரிசையில் களமிறங்குவதற்கு காத்திருக்கிறார். மும்பை அணிக்காக நம்பர் 4 வரிசையில் களமிறங்கி பல்வேறு சாதனையை படைத்திருக்கிறார்.
ஸ்ரேயாஸ் ஐயர் ஃபார்ம்
அதேபோல் ஒருநாள் கிரிக்கெட்டில் விராட் கோலியின் இடத்தை நிரப்பிய ஸ்ரேயாஸ் ஐயர், டெஸ்ட் கிரிக்கெட்டில் மீண்டும் சேர்க்கப்பட வாய்ப்புகள் உருவாகி இருக்கிறது. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் மிகச்சிறந்த ஃபார்மில் இருந்த அவர், தற்போது கேப்டனாகவும் மிகச்சிறப்பாக வளர்ந்துள்ளார். இதனால் மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட் பக்கம் திரும்பினால், நம்பர் 4 பேட்டிங் வரிசையில் ஸ்ரேயாஸ் ஐயருக்கும் வாய்ப்பு கிடைக்கும்.
ருதுராஜ் கம்பேக்?
இறுதியாக சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் நம்பர் 4 பேட்டிங் வரிசையில் விளையாட வாய்ப்புகள் உள்ளதாக பார்க்கப்படுகிறது. கடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் போதே ருதுராஜ் கெய்க்வாட் டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டிருந்தார். ஆனால் வெஸ்ட் இண்டீஸ் தொடரின் போதே காயம் ஏற்பட்டதால், விலக வேண்டிய நிலை வந்தது. அதன்பின் இந்திய அணிக்குள் வருவதற்கு அவர் போராடி வருகிறார்.
சாய் சுதர்சனுக்கு வாய்ப்பு
இதில் சாய் சுதர்சன் டாப் 3 பேட்டிங் வரிசையில் விளையாடக் கூடியவர். அதனால் அவர் தொடக்க வீரராக களமிறங்கவே வாய்ப்புகள் உள்ளது. ஏற்கனவே இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட் தொடர்களில் தொடக்க வீரராக களமிறங்கி சாதித்துள்ளதால், இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications