இதுதான் கம்பீரின் அதிகாரம்.. கைவிரித்த பிசிசிஐ.. 2027 உலகக்கோப்பை வரை இந்திய அணி இப்படிதான்!
மும்பை: இந்திய டெஸ்ட் அணிக்கு தனி பயிற்சியாளரை நியமிக்க பிசிசிஐ ஆலோசித்து வருவதாக கூறப்பட்ட நிலையில், கம்பீரின் பதவிக்காலம் முடியும் வரை எந்த மாற்றமும் இருக்காது என்று பிசிசிஐ தரப்பில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கம்பீரின் அதிகாரம் பிசிசிஐ நிர்வாகத்திலும் இருப்பதாக பார்க்கப்படுகிறது.
இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமனம் செய்யப்பட்டதில் இருந்து, டெஸ்ட் கிரிக்கெட்டில் படுதோல்வியை சந்தித்து வருகிறது. இந்திய அணி மொத்தமாக ஆடிய 19 போட்டிகளில் 10 தோல்வி, 2 டிரா, 7 வெற்றி என்ற நிலையில் உள்ளது. இந்திய அணி சொந்த மண்ணிலேயே நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளிடம் தோல்வியை சந்தித்தது.

இதனால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில் இந்திய டெஸ்ட் அணிக்கு மட்டும் தனி பயிற்சியாளரை நியமனம் செய்ய பிசிசிஐ ஆலோசித்து வருவதாக கூறப்பட்டது. டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் செயல்பாடுகளை பார்த்த பின், ஒயிட் பால் கிரிக்கெட்டில் கம்பீரின் நிலையை முடிவு செய்யவும் தயாராகி வருவதாக கூறப்பட்டது.
அதற்கு இந்திய அணி வீரர்களிடையே நிலவி வரும் சந்தேக எண்ணமே காரணமாகவும் சொல்லப்பட்டது. ஏனென்றால் இந்திய அணியின் எந்தவொரு வீரருக்கும் பிளேயிங் லெவனில் நிரந்தர இடம் கிடைக்குமா என்பதே தெரியாமல் இருக்கின்றனர். இதனால் இந்திய அணி வீரர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தவும், ரோல் என்ன என்பதை தெளிவாக விளக்கவும் விவிஎஸ் லக்ஷ்மணை கொண்டு வர திட்டமிடுவதாக சொல்லப்பட்டது.
இதுதொடர்பாக பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா விளக்கம் கொடுத்துள்ளார். அதன்படி, இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து கவுதம் கம்பீரை நீக்கும் எண்ணமே இல்லை. 2027 உலகக்கோப்பை தொடருடன் கம்பீரின் பதவிக்காலம் நிறைவடைகிறது. அதுவரை கம்பீரே தலைமைப் பயிற்சியாளராக தொடர்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலமாக கவுதம் கம்பீரின் அதிகாரம் உச்சத்தில் இருப்பதாக பார்க்கப்படுகிறது. இந்திய அணி மற்றும் தேர்வு குழுவில் மட்டுமல்லாமல் பிசிசிஐ நிர்வாகத்திலும் கம்பீரின் அதிகாரம் இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியில் படுதோல்விகள் தொடரலாம் என்று கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications