"அவருக்கு போதிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை" தமிழக வீரருக்கு ஆதரவாக கம்பீர் எடுத்த முடிவு
மும்பை: ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் நம்பர் 3 பேட்ஸ்மேனாக யார் களமிறங்குவார்கள் என்ற கேள்விக்கு பதில் கிடைத்துள்ளது. இந்திய அணியின் பயிற்சியாளர் கம்பீர், சாய் சுதர்சனுக்கு இன்னும் போதுமான வாய்ப்புகளை வழங்கவில்லை என்று கூறி இருக்கிறார். இதனால் நாளைய ஆட்டத்தில் தமிழக வீரருக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று பார்க்கப்படுகிறது.
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒரே ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில், இந்திய அணியின் 3வது வரிசை பேட்டிங் இடத்தில் இளம் வீரர் பி. சாய் சுதர்சன் தொடர்ந்து நீடிப்பார் என்று இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் உறுதிப்படுத்தியுள்ளார். அவருக்கு இன்னும் போதிய வாய்ப்புகள் வழங்கப்படவில்லை என்றும் கம்பீர் ஆதரவு தெரிவித்துள்ளார்.

சாய் சுதர்சன் இதுவரை 11 இன்னிங்ஸ்களில் விளையாடி 302 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இதில் இரண்டு அரைசதங்கள் அடங்கும். ஆனால், அவர் பெரும்பாலான போட்டிகளை இங்கிலாந்து போன்ற சவாலான சூழ்நிலைகளிலேயே எதிர்கொண்டார் என்பதால், அவருக்கு இன்னும் நியாயமான வாய்ப்புகள் தரப்பட வேண்டும் என கம்பீர் கருதுகிறார்.
சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் சாய் சுதர்சன் 700 ரன்களுக்கு மேல் குவித்து அசத்தலான ஃபார்மில் உள்ளார். வெறும் 4-5 போட்டிகளை வைத்து ஒரு இளம் வீரரின் திறமையை எடைபோட முடியாது. சாய் சுதர்சனுக்கு இன்னும் சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. வெறும் 4-5 போட்டிகளின் அடிப்படையில் ஒரு வீரரை நாம் மதிப்பிட்டால், எதிர்காலத்திற்கான வலுவான அணியை நம்மால் உருவாக்கவே முடியாது என்று கம்பீர் கூறியுள்ளார்.
ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ள இலங்கைக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்காக, இந்திய அணி 4 ஸ்பின்னர்களை அழைத்துச் செல்ல திட்டமிட்டுள்ளது. இந்த ஆப்கானிஸ்தான் டெஸ்ட் போட்டி மூலம், அந்த 4வது ஸ்பின்னர் யார் என்பதை தேர்வு செய்ய கம்பீர் முடிவு செய்துள்ளார். இதற்காக புதுமுக சுழற்பந்து வீச்சாளர்களான மானவ் சுதர் மற்றும் ஹர்ஷ் துபே ஆகியோருக்கு அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
முல்லான்பூரில் சனிக்கிழமை முதல் தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டி, ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) வளையத்திற்குள் வராது. இதனால் இந்திய அணியில் சீனியர் வீரர்களுக்கு வாய்ப்புகளை கொடுத்து அவர்களின் நம்பிக்கையை அதிகரிக்கலாம் என்பதே இந்திய அணி நிர்வாகத்தின் கருத்தாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications