"காப்பான்" ஷமி! இந்திய டீமை மட்டுமில்லை.. சரியான நேரத்தில் யாரை காப்பாற்றியிருக்கார் பாருங்க!
டெல்லி: இந்திய கிரிக்கெட்டில் முக்கிய நட்சத்திரமாக இருக்கும் முகமது ஷமி விபத்தில் சிக்கிய நபரைக் காப்பாற்றியுள்ளார். இது தொடர்பாக வீடியோ ஒன்றும் இணையத்தில் இப்போது டிரெண்டாகி வருகிறது.
இந்திய கிரிக்கெட்டில் தற்போது உள்ள முக்கியமான வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி. கடந்த 2013ஆம் ஆண்டில் பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் அறிமுகமான ஷமி அதன் பிறகு சீரான ஆட்டத்தையே வெளிப்படுத்தியிருக்கிறார்.

டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் இந்தியாவின் முக்கிய பவுலராக ஷமி இருந்து வருகிறார். பல போட்டிகளில் இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய காரணமாகவும் ஷமி இருந்துள்ளார்.
ஷமி: இந்தியாவில் நடந்த உலகக் கோப்பை தொடரிலும் கூட ஷமியின் ஆட்டம் பல போட்டிகளில் நாம் வெல்லக் காரணமாக இருந்தது. இந்த உலகக் கோப்பை தொடரில் எப்போதெல்லாம் இந்திய அணி சற்று இக்கட்டான சூழலில் இருக்கிறதோ அப்போதெல்லாம் சரியாக விக்கெட் எடுத்து இந்தியாவுக்கு நம்பிக்கை கொடுத்தவர் ஷமி.. மேலும், இந்த உலகக் கோப்பையில் வெறும் 7 போட்டிகளில் ஆடிய போதிலும் 24 விக்கெட்களை வீழ்த்தி அதிக விக்கெட் எடுத்தோர் லிஸ்டில் முதல் இடத்தை பிடித்தார்.
இப்படி அனைத்து இக்கட்டான சூழல்களிலும் இந்திய டீமை காத்த நபராக ஷமி இருந்தார். இதற்கிடையே இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி நானிடாலில் விபத்தில் சிக்கிய ஒருவரின் உயிரைக் காப்பாற்றி இருக்கிறார். இது தொடர்பாக வீடியோ ஒன்றையும் ஷமி தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். சாலையில் திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் அருகே உள்ள பள்ளத்தில் பாய்ந்துள்ளது. அப்போது அங்கிருந்த சிலருடன் இணைந்து காரில் சிக்கிய அந்த நபரின் உயிரை ஷமி காப்பாற்றியுள்ளார்.
மீட்பு: சரியான நேரத்தில் மற்றவர்களுடன் இணைந்து ஷமி அந்த நபரைக் காப்பாற்றியுள்ளார். இல்லையென்றால் அந்த நபரின் உயிரிக்கே கூட ஆபத்து ஏற்பட்டிருக்கும். இந்த வீடியோவை பகிர்ந்த ஷமி, "அவர் மிகவும் அதிர்ஷ்டசாலி.. கடவுள் அவருக்கு 2வது வாய்ப்பை கொடுத்துள்ளார். அவரது கார் எனது காருக்கு முன்னால் சென்று கொண்டிருந்த நிலையில், திடீரென அது கட்டுப்பாட்டை இழந்து மலைப்பாதையில் இருந்து கீழே விழுந்தது. நாங்கள் சரியான நேரத்தில் அவரை காப்பாற்றினோம்" என்று பதிவிட்டுள்ளார்.
பல நேரங்களில் இந்திய கிரிக்கெட் அணியை இக்கட்டான சூழலில் இருந்து காப்பாற்றிய ஷமி, இப்போது விபத்தில் சிக்கியவரின் உயிரையும் காப்பாற்றியுள்ளார். இதற்காக ஷமியை இணையத்தில் பலரும் பாராட்டித் தள்ளி வருகிறார்கள்.
டிரைவிங்: ஷமி ஒரு எளிய பின்னணியில் இருந்து வந்து கிரிக்கெட் உலகில் சாதனை செய்த கிரிக்கெட் வீரர் ஆவார். அவருக்குப் பயணங்கள் செல்வதும் டிரைவிங்கும் மிகவும் பிடிக்குமாம்.
இது குறித்து அவர் கூறுகையில், "எனக்குப் பயணம் செய்வதும் மீன்பிடித்தலும் பிடிக்கும். அதிலும் நானே டிரைவ் செய்து போவது ரொம்ப பிடிக்கும். எனக்கு பைக் மற்றும் கார் ஓட்டுவது பிடிக்கும். ஆனால் இந்தியாவுக்காக விளையாடிய பிறகு, நான் பைக் ஓட்டுவதை நிறுத்திவிட்டேன். காயம் ஏற்பட்டால் என்ன செய்வது? சில சமயம் மட்டும் நெடுஞ்சாலைகளிலும் சொந்த ஊரிலும் பைக் ஓட்டுவேன்" என்று கூறியிருந்தார்.












Click it and Unblock the Notifications