எங்கள தூக்குறதா பேசுனீங்களாமே.. ஐசிசி பட்டியலில் சம்பவம் செய்த கோலி, ரோகித்.. கம்பீருக்கு பதிலடி!
மும்பை: இந்திய அணியின் ஜாம்பவான் வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இருவரும் ஐசிசி தரவரிசை பட்டியலில் முதல் இரு இடங்களை பிடித்து அசத்தியுள்ளனர். இதன் மூலமாக தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர் மற்றும் பயிற்சியாளர் கம்பீர் ஆகியோருக்கும் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளதாகவும் பார்க்கப்படுகிறது.
இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக கவுதம் கம்பீர் கொண்டு வரப்பட்டது முதலே பல்வேறு சிக்கல் உருவாகிவிட்டது. முதற்கட்டமாக டி20 கேப்டன் பதவிக்கு ஹர்திக் பாண்டியா வரக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தார். அதன்பின் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து சீனியர்களை ஒதுக்கிய கவுதம் கம்பீர், பின்னர் இளம் கேப்டனான சுப்மன் கில்லை முன்னிலைப்படுத்தினார்.

இதன் மூலமாக டெஸ்ட் மற்றும் டி20 அணிகள் கம்பீரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. ஆனால் ஒருநாள் கிரிக்கெட்டில் சீனியர் வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் தொடர்ந்து விளையாட முடிவு செய்தனர். விரைவில் ஓய்வை அறிவித்துவிடுவார்கள் என்று சொல்லப்பட்ட போது, இருவரும் பழைய ஃபிட்னஸ் உடன் பேட்டிங்கில் உச்சக்கட்ட ஃபார்மை வெளிப்படுத்தி வருகின்றனர்.
ஆஸ்திரேலியா தொடரிலேயே ரோகித் சர்மா அசத்தலாக ஆடிய நிலையில், தென்னாப்பிரிக்கா தொடரில் விராட் கோலி 2 சதங்கள், ஒரு அரைசதம் என்று வெளுத்து கட்டினார். இதன் மூலமாக நடபபாண்டில் ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அதிக ரன்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் விராட் கோலி முதலிடத்திலும், ரோகித் சர்மா 2வது இடத்திலும் இருக்கின்றனர்.
தென்னாப்பிரிக்கா ஒருநாள் தொடருக்கு பின் இரு வீரர்களுடன் ஓய்வு தொடர்பான பேச்சுவார்த்தை முன்னெடுக்க அஜித் அகர்கர் முடிவு செய்திருந்தார். ஆனால் இன்று வெளியாகி இருக்கும் ஐசிசி தரவரிசைப் பட்டியலில் ரோகித் சர்மா முதலிடத்திலும், விராட் கோலி 2வது இடத்திலும் இருக்கின்றனர். இது அவரது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இதன் மூலமாக கம்பீர் மற்றும் அஜித் அகர்கர் கூட்டணிக்கும் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். அதேபோல் தங்களை வெளியேற்றும் முடிவில் இருந்தால், அதனை கைவிட வைக்கும் வகையில் விராட் கோலி, ரோகித் சர்மா ஆட்டம் தொடங்கி இருப்பதாகவும் பேச்சுகள் எழுந்துள்ளது. இதனால் 2027 உலகக்கோப்பை வரை இருவரும் தொடர்ந்து ஆடுவார்கள் என்றும் பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications