என்னா மனுஷன்.. ஷாம்பைனுடன் விளையாடிய விராட் கோலி.. தடம் தெரியாமல் நகர்ந்த முகமது ஷமி.. நடந்தது என்ன?
துபாய்: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரை இந்திய அணி கைப்பற்றிய பின், இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் ஷாம்பைன் எடுத்து சக வீரர்கள் மீது பீச்சியடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த முகமது ஷமி, கொண்டாட்டங்கள் நடந்த இடத்தில் இருந்து நகர்ந்து சென்ற சம்பவம் ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சாம்பியன்ஸ் டிராபி தொடரின் போது அதிக சர்ச்சைகளில் சிக்கியவர் முகமது ஷமி தான். வழக்கமாக கேப்டன் மற்றும் நட்சத்திர வீரர்கள் மீது மட்டுமே இந்திய ரசிகர்களின் கவனம் மற்றும் விமர்சனங்கள் இருக்கும். ஆனால் சிறப்பாக ஆடிய முகமது ஷமியின் பெயர் தொடர்ச்சியாக செய்திகளில் இடம்பெற்று கொண்டே இருந்தது.

அதற்கு முகமது ஷமி நோன்பு வைக்காததே காரணம் ஆகும். இஸ்லாமியரான முகமது ஷமி, ரமலான் காலத்தில் நோன்பு வைக்காமல் நாட்டுக்காக கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று வந்தார். ஆனால் சில இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்கள் முகமது ஷமி செய்தது கிரிமினல் குற்றம் என்று கூறி சர்ச்சையை உருவாக்கினார்கள். ஆனால் அவருக்கு சர்வதேச அளவில் ஆதரவும் கிடைத்தது.
இந்த நிலையில் நேற்று இந்திய அணி வென்ற பின் வீரர்கள் கொண்டாடிய போது, முகமது ஷமியின் செயல்பாடுகள் ரசிகர்களிடையே பாராட்டுகளை பெற்று வருகிறது. சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை வென்றுவிட்டு இந்திய அணியின் வீரர்கள் குழு புகைப்படம் எடுத்து கொண்டனர். அந்த நிமிடத்தில் இந்திய அணி வீரர்களுக்கு ஷாம்பைன் பாட்டில்கள் பரிசாக அளிக்கப்பட்டது.
அதனை கையில் எடுத்து விராட் கோலி, புகைப்படம் எடுத்த போதே சக வீரர்கள் மீது பீச்சியடிக்க தொடங்கினார். அதிலும் ரிஷப் பண்ட் உடன் விளையாடிய போது, அவரை ஷாம்பைன் மூலமாக குளிப்பாட்டிவிட்டார் என்றே சொல்லலாம். அதேபோல் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ஹர்சித் ராணாவும் ஷாம்பைனுடன் கொண்டாடினார்கள்.
ஆனால் விராட் கோலி ஷாம்பைனை கையில் எடுத்த அந்த நொடியே உடனடியாக புகைப்படங்கள் எடுத்து முடித்துவிட்டு முகமது ஷமி நகர்ந்து கொண்டார். அதன்பின் நீண்ட இடைவெளிக்கு பின்னரே முகமது ஷமி கோப்பையை கையில் எடுத்தார். இஸ்லாமியரான முகமது ஷமி எந்த சூழலிலும் மதுபானங்களை தொட்டதே கிடையாது. அதேபோல் மதுபான விளம்பரங்களிலும் நடிக்க மாட்டார்.
இவ்வளவு ஏன், மதுபான பிராண்ட் பொறித்த ஜெர்சியை கூட அணிய மாட்டேன் என்று கடமையுடன் பின்பற்றி வருபவர். இதனால் முகமது ஷமியின் செயல்பாடுகள் ரசிகர்களிடையே பாராட்டுகளை பெற்று வருகிறது. மேலும் 2023ஆம் ஆண்டு உலகக்கோப்பையை வென்ற போது ஆஸ்திரேலியா அணி வீரர்கள் உஸ்மான் கவாஜாவுக்காக ஷாம்பைன் ஊற்றி விளையாடுவதை சிறிது நேரம் நிறுத்தியதும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
