பாவம் ருதுராஜ், முகமது ஷமி.. செல்லப்பிள்ளைக்கு வாய்ப்பு கொடுத்த கம்பீர்.. கொந்தளிக்கும் ரசிகர்கள்!
மும்பை: நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் முகமது ஷமி ஆகியோர் சேர்க்கப்படாதது ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதேபோல் கம்பீரின் செல்லப்பிள்ளையான ஹர்சித் ராணாவுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இன்னும் ஒரு வாரத்தில் தொடங்க உள்ளது. அதற்கான இந்திய அணி நேற்று மாலை அறிவிக்கப்பட்டது. அந்த அணியில் மொத்தமாக 3 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதாவது கேப்டன் சுப்மன் கில் கம்பேக் கொடுத்துள்ளார். அதேபோல் துணைக் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் காயத்தில் இருந்து குணமடைந்து வந்துள்ளார்.

அதேபோல் துருவ் ஜுரெல் வாய்ப்பே பெறாமல் நீக்கப்பட்டு, முகமது சிராஜ் சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் திலக் வர்மா ஆகியோரும் நீக்கப்பட்டுள்ளனர். தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் சதம் விளாசி அசத்தி இருந்தார். ஆனால் ருதுராஜ் கெய்க்வாட் நீக்கப்பட்டிருப்பது ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்னொரு புறம் முகமது ஷமியின் பெயர் பரிசீலிக்கப்பட்டு வருவதாக பிசிசிஐ நிர்வாகி ஒருவர் பேசி இருந்தார். ஆனால் முகமது ஷமியின் பெயரும் இந்திய அணியில் இடம்பெறவில்லை. இத்தனைக்கும் விஜய் ஹசாரே தொடரில் ருதுராஜ் கெய்க்வாட் 5 இன்னிங்ஸில் ஒரு சதம், ஒரு அரைசதம் உட்பட 257 ரன்களை விளாசி அசத்தியதோடு, உச்சக்கட்ட ஃபார்மில் இருக்கிறார்.
அதேபோல் முகமது ஷமியும் 5 போட்டிகளில் விளையாடி 11 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். ஏற்கனவே சையத் முஷ்டாக் அலி தொடரிலும் 7 போட்டிகளில் விளையாடி 15 விக்கெட்டுகளை முகமது ஷமி வீழ்த்தி இருந்தார். ஆனாலும் உள்நாட்டு கிரிக்கெட்டில் பெரிதாக சாதித்திடாத ஹர்சித் ராணா கம்பீரின் செல்லப்பிள்ளையாக இருப்பதால் வாய்ப்புகளை பெற்று வருகிறார்.
ஸ்ரேயாஸ் ஐயரின் கம்பேக் காரணமாக ருதுராஜ் கெய்க்வாட் இடத்தை பறிகொடுத்திருப்பதாக சொல்லப்பட்டாலும், பேக் அப் வீரராகவாவது இந்திய அணியில் தேர்வு செய்திருக்க வேண்டும் என்ற விவாதம் நடந்து வருகிறது. இதனால் கவுதம் கம்பீர் மற்றும் அஜித் அகர்கர் இருவரையும் ரசிகர்கள் காட்டமாக விமர்சித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications