"ஹிட்மேன் துணை" ரோஹித் சர்மா பேட்டில் பொறுப்புடன் ஆடிய ஸ்ரேயாஸ் ஐயர்.. இதுதான் மும்பை பாசம்!
துபாய்: நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் சிறப்பாக விளையாடி 98 பந்துகளில் 79 ரன்கள் எடுத்து அசத்தியுள்ளார். இந்த இன்னிங்ஸை விளையாடுவதற்கு கேப்டன் ரோஹித் சர்மாவின் பேட்டை பயன்படுத்தி ஸ்ரேயாஸ் ஐயர் விளையாடி இருப்பது அவரது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
சாம்பியன்ஸ் டிராபி தொடரின் கடைசி ஆட்டத்தில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் மிட்சல் சான்ட்னர் பவுலிங்கை தேர்வு செய்தார். இதன்பின் களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. கில் 2 ரன்களிலும், ரோஹித் சர்மா 17 ரன்களிலும், விராட் கோலி 11 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

இதனால் இந்திய அணி 30 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதன்பின் களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் - அக்சர் படேல் இருவரும் 98 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்திய அணியை மீட்டனர். சிறப்பாக ஆடிய ஸ்ரேயாஸ் ஐயர் 75 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். தொடர்ந்து அதிரடிக்கு கியரை மாற்றிய அவர், சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் 98 பந்துகளில் 2 சிக்ஸ், 4 பவுண்டரி உட்பட 79 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். ஸ்ரேயாஸ் ஐயரின் அபார ஆட்டத்தால் இந்திய அணி சிறப்பான கம்பேக்கை கொடுத்தது. அதேபோல் நியூசிலாந்து அணிக்கு எதிராக கடைசியாக விளையாடிய 8 போட்டிகளில் ஸ்ரேயாஸ் ஐயர் 2 சதங்கள், 4 அரைசதங்களை விளாசி அசத்தியுள்ளார்.
அதேபோல் இந்த அரைசதத்தின் மூலமாக சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணிக்காக அதிக ரன்களை விளாசிய வீரர்கள் பட்டியலில் ஸ்ரேயாஸ் ஐயர் முதலிடத்தில் இருக்கிறார். 3 போட்டிகளில் விளையாடி 150 ரன்களை ஸ்ரேயாஸ் ஐயர் விளாசி இருக்கிறார். இந்த இன்னிங்ஸில் ஸ்பின்னர்களை தனது ஃபூட் வொர்க் மூலமாக ஸ்ரேயாஸ் ஐயர் சிறப்பாக கையாண்டார்.
இது பாராட்டுகளை பெற்று வரும் நிலையில், ஸ்ரேயாஸ் ஐயர் இந்த இன்னிங்ஸில் பயன்படுத்திய பேட் ரசிகர்களிடையே கவனத்தை பெற்றுள்ளது. ஸ்ரேயாஸ் ஐயரின் பேட்டில் Hitman என்ற வார்த்தைகள் பொறிக்கப்பட்டிருந்தன. இதன் மூலமாக ஸ்ரேயாஸ் ஐயர் பயன்படுத்தியது ரோஹித் சர்மாவின் பேட் என்பது உறுதியானது.
ஏற்கனவே பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்திலும் ஸ்ரேயாஸ் ஐயர் ரோஹித் சர்மாவின் பேட்டைதான் பயன்படுத்தினார். தற்போது மீண்டும் ரோஹித் சர்மா பேட் மூலமாக அரைசதம் அடித்து இந்திய அணியை காத்துள்ளார். இதனால் ரோஹித் சர்மாவின் ரசிகர்களும் ஸ்ரேயாஸ் ஐயரை பாராட்டி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications