காயத்தால் விலகும் சுப்மன் கில்.. இந்திய அணிக்குள் ருதுராஜ்! கம்பீர், அகர்கர் மனது வைப்பார்களா?
மும்பை: தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் விளையாட வாய்ப்புகள் குறைவு என்று கூறப்பட்டு வரும் நிலையில், அவரின் இடத்தில் ருதுராஜ் கெய்க்வாட் தேர்வு செய்யப்பட வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா அணியிடம் படுதோல்வியை சந்தித்தது. இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் பேட்டிங் ஆடிய போது கேப்டன் சுப்மன் கில்லுக்கு கழுத்தில் வலி ஏற்பட்டது.

இதனால் ரிட்டையர்ட் ஹர்ட்டாகி வெளியேறிய சுப்மன் கில், பின்னர் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் அழைத்து செல்லப்பட்டார். இதன்பின் சுப்மன் கில் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருக்கும் நிலையில், இதுவரை களத்திற்கு திரும்பவில்லை. இதனால் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் சுப்மன் கில் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதேபோல் சுப்மன் கில் தொடர்ச்சியாக கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று வருவதால், அவருக்கு ஓய்வு அளிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் கவுகாத்தியில் நடக்கவுள்ள 2வது டெஸ்ட் போட்டியில் சுப்மன் கில்லின் இடத்தில் எந்த வீரருக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்ற விவாதம் தொடங்கியுள்ளது.
அதன்படி பிசிசிஐ பார்வையில் ருதுராஜ் கெய்க்வாட் முன்னிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே ருதுராஜ் கெய்க்வாட் இந்திய அணியில் இருந்து ஒதுக்கப்பட்ட சூழலில், தற்போது உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் உச்சக்கட்ட ஃபார்மில் இருக்கிறார். புச்சி பாபு, துலீப் டிராபி, ரஞ்சி டிராபி மற்றும் இந்தியா ஏ அணிகளுக்காக சதம், அரைசதம் என்று விளாசி வருகிறார்.
தென்னாப்பிரிக்கா ஏ அணிக்கு எதிரான 2 ஒருநாள் போட்டியில் கூட சதம் மற்றும் அரைசதம் அடித்து இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றார். இதனால் சுப்மன் கில் விலகும் பட்சத்தில், அந்த இடத்தில் ருதுராஜ் கெய்க்வாட் விளையாட அதிக வாய்ப்புகள் உள்ளதாக பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் ரஞ்சி டிராபியில் ருதுராஜ் கெய்க்வாட் நம்பர் 4 பேட்டிங் வரிசையில் ஆடுவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications