மீண்டும் கழுத்தில் ஏற்பட்ட வலி.. பயிற்சியில் பங்கேற்காத சுப்மன் கில்.. நாளை கம்பீர் வைத்த பரீட்சை!
கவுகாத்தி: இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் கழுத்தில் காயம் ஏற்பட்டுள்ள நிலையில், இந்திய வீரர்களுடன் கவுகாத்திக்கு பயணம் மேற்கொண்டிருந்தார். ஆனால் இன்று இந்திய வீரர்களுடன் பயிற்சியில் ஈடுபடாமல் ஓய்வில் இருக்கும் சுப்மன் கில், நாளை ஃபிட்னஸ் சோதனைக்கு தயாராகி வருவதாக தெரிய வந்துள்ளது.
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 30 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது. இந்தப் போட்டியின் 2வது நாளில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் பேட்டிங் செய்து கொண்டிருந்த போது, திடீரென கழுத்தில் ஏற்பட்ட பிடிப்பு காரணமாக ரிட்டையர்ட் ஹர்ட்டாகி வெளியேறினார்.

அதன்பின் சுப்மன் கில் பேட்டிங் செய்ய வரவே இல்லை. இந்திய அணியின் தோல்விக்கு சுப்மன் கில்லின் காயமும் ஒரு காரணமாக மாறியது. இதன்பின் மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெற்ற சுப்மன் கில், கவுகாத்திக்கு புறப்பட்ட இந்திய அணியுடன் பயணித்தார். சுப்மன் கில்லின் உடல் மருத்துவ சிகிச்சைக்கு பலன் அளிக்கிறது என்று பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் கவுகாத்தியில் வந்து இறங்கிய சுப்மன் கில் இன்னும் கழுத்தில் ஏற்பட்ட காயத்தில் இருந்து முழுமையாக குணமடையவில்லை என்று தெரிந்தது. இப்படியான சூழலில் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று இந்திய அணி வீரர்கள் இன்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த பயிற்சியில் சுப்மன் கில் பங்கேற்கவில்லை. மாறாக சுப்மன் கில்லுக்கு மட்டும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி நடக்க உள்ள நிலையில், நாளை சுப்மன் கில்லுக்கு ஃபிட்னஸ் சோதனை செய்யப்பட உள்ளது. அந்த சோதனை சுப்மன் கில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே 2வது டெஸ்டில் களமிறங்குவார் என்று தெரிகிறது.
ஒருவேளை சுப்மன் கில் களமிறங்கவில்லை என்றால், பொறுப்பு கேப்டனாக ரிஷப் பண்ட் செயல்படுவார் என்று தெரிய வந்துள்ளது. அதேபோல் நிதிஷ் குமார் ரெட்டியும் ஏற்கனவே இந்திய அணிக்கு மீண்டும் அழைக்கப்பட்டுள்ளார். ஒருவேளை சுப்மன் கில் விளையாடவில்லை என்றால், சாய் சுதர்சன் அல்லது நிதிஷ் குமார் ரெட்டி ஆகியோரில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications