மீண்டும் புறக்கணிப்பு.. ஸ்ரேயாஸ் ஐயரை பந்தாடும் பிசிசிஐ நிர்வாகம்.. காரணம் அந்த ஒரு சம்பவம்தான்!
மும்பை: பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரை மீண்டும் ஒருமுறை பிசிசிஐ இந்திய அணியில் இருந்து ஓரம்கட்டி இருக்கிறது. இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய ஏ அணியில் நட்சத்திர வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் தேர்வு செய்யப்படவில்லை. இதற்கு ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் பிசிசிஐ இடையிலான மோதலே காரணமாக பார்க்கப்படுகிறது.
ஐபிஎல் தொடர் முடிவடைந்த பின் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சுற்றுப்பயணம் செய்கிறது. அதற்கு முன்பாக இங்கிலாந்து லயன்ஸ் அணியுடன் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா ஏ அணி விளையாட உள்ளது. இதற்காக இளம் வீரர்கள் பலரும் தயார் செய்யப்பட்டுள்ளனர்.

சாய் சுதர்சன், ஜெய்ஸ்வால், துருவ் ஜுரெல், சர்ஃபராஸ் கான், அபிமன்யூ ஈஸ்வரன், ருதுராஜ் கெய்க்வாட், அன்சுல் கம்போஜ், கருண் நாயர், இஷான் கிஷன் உள்ளிட்ட ஏராளமானோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இந்திய அணிக்காக சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அதிக ரன்களை சேர்த்த ஸ்ரேயாஸ் ஐயருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை.
இந்திய அணியின் ஜாம்பவான் வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளனர். அவர்களின் இடத்தில் விளையாட 2 வீரர்களை தயார் செய்ய வேண்டிய பொறுப்பு பிசிசிஐக்கு உள்ளது. ஏற்கனவே டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடிய அனுபவம் கொண்ட ஸ்ரேயாஸ் ஐயர் தற்போது சிறந்த ஃபார்மில் உள்ளார்.
கடந்த ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது ஸ்ரேயாஸ் ஐயர் ஃபார்மின்றி இந்திய அணியில் இருந்து வெளியேற்றப்பட்டார். அதன்பின் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதோடு, பிசிசிஐ ஒப்பந்தமும் அளிக்கப்படவில்லை. தற்போது மீண்டும் பிசிசிஐ ஒப்பந்தம் அளிக்கப்பட்டாலும், ஸ்ரேயாஸ் ஐயர் தொடர்ச்சியாக பிசிசிஐ நிர்வாகத்தால் பந்தாடப்பட்டு வருகிறார்.
இந்திய டி20 அணியிலும், டெஸ்ட் அணியிலும் ஸ்ரேயாஸ் ஐயரை சேர்க்க மாட்டோம் என்று பிசிசிஐ பிடிவாதமாக இருந்து வருகிறது. இதற்கு ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் பிசிசிஐ இடையிலான மோதலே காரணம். உலகக்கோப்பை தொடரின் போது பிரதமர் நரேந்திர மோடியுடன் ஸ்ரேயாஸ் ஐயர் கை குலுக்காமல் விலகி சென்றார்.
அதேபோல் நாடாளுமன்றத் தேர்தலின் போது துருவ் ராத்தேவை பின் தொடர்ந்தார். அதன்பின் ஸ்ரேயாஸ் ஐயர் பின் தொடர்வதையும் நிறுத்தி இருந்தார். இதனால் ஸ்ரேயாஸ் ஐயர் ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியை சிறப்பாக வழிநடத்தி ரன்களை குவித்து வந்த போதும், அவரை இந்திய அணி நிர்வாகம் புறக்கணித்து வருவதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications