"மே 3" ஆர்சிபி அணியை பழிவாங்க தயாரான சிஎஸ்கே.. ஐபிஎல் அட்டவணை வெளியீடு.. சென்னை ரசிகர்கள் ஜாலி!
மும்பை: நடப்பாண்டு ஐபிஎல் தொடருக்கான அட்டவணையை வெளியாகியுள்ளது. அதன்படி சிஎஸ்கே அணி மார்ச் 23ஆம் தேதி மும்பை அணியை எதிர்த்தும், மார்ச் 28ஆம் தேதி ஆர்சிபி அணியை எதிர்த்தும் சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடவுள்ளது. ஆரம்பமே அமர்க்களமாக இருப்பதால், சிஎஸ்கே ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடருக்கான அட்டவணை வெளியாகியுள்ளது. அதன்படி மார்ச் 22ஆம் தேதி ஐபிஎல் தொடர் தொடங்கி, இறுதிப்போட்டி மே 25ஆம் தேதி நடக்கவுள்ளது. அதேபோல் பிளே ஆஃப் போட்டிகளை பொறுத்தவரை மே 20ஆம் தேதி குவாலிஃபயர் போட்டியும், மே 21ஆம் தேதி எலிமினேட்டர் போட்டியும், மே 23ஆம் தேதி குவாலிஃபயர் 2வது போட்டியும் நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மார்ச் 22ஆம் தேதி நடக்கும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான கேகேஆர் அணியை எதிர்த்து ஆர்சிபி அணி விளையாடவுள்ளது. இதனைத் தொடர்ந்து மார் 23ல் ஐதராபாத் - ராஜஸ்தான் இடையிலான ஆட்டமும், மார்ச் 23ல் சென்னை - மும்பை இடையிலான ஆட்டமும் நடக்கவுள்ளது. சிஎஸ்கே - மும்பை போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நடத்தப்படவுள்ளது.
சிஎஸ்கே அணியை பொறுத்தவரை சேப்பாக்கம் மைதானத்தில் 7 போட்டிகளில் விளையாடவுள்ளது. அதில் மார்ச் 23ஆம் தேதி சிஎஸ்கே vs மும்பை போட்டியும், மார்ச் 28ஆம் தேதி சிஎஸ்கே vs ஆர்சிபி அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நடக்கவுள்ளது. முதல் 2 போட்டிகளுமே பிளாக்பஸ்டர் ஆட்டங்களாக திட்டமிடப்பட்டுள்ளது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதன்பின் ஏப்ரல் 5ஆம் தேதி நடக்கும் ஆட்டத்தில் சிஎஸ்கே - டெல்லி போட்டியும், ஏப்ரல் 11ல் கேகேஆர் - சிஎஸ்கே ஆட்டமும், ஏப்ரல் 25ல் சிஎஸ்கே - ஐதராபாத் போட்டியும், ஏப்ரல் 30ல் சிஎஸ்கே - பஞ்சாப் போட்டியும், மே 12ல் சிஎஸ்கே - ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியும் நடக்கவுள்ளது. மே மாதத்தில் சேப்பாக்கம் மைதானத்தில் ஒரேயொரு ஆட்டத்தில் மட்டுமே சிஎஸ்கே அணி விளையாடவுள்ளது.
அதேபோல் நடப்பாண்டில் மும்பை, ஆர்சிபி, ராஜஸ்தான், பஞ்சாப், கேகேஆர் ஆகிய 5 அணிகளுடன் தலா 2 போட்டிகளில் சிஎஸ்கே அணி விளையாடவுள்ளது. எஞ்சிய அணிகளான குஜராத், லக்னோ, டெல்லி மற்றும் ஐதராபாத் ஆகிய அணிகளுடன் தலா ஒரு போட்டியில் சிஎஸ்கே விளையாடவுள்ளது. மும்பை அணியுடனான 2வது ஆட்டம் ஏப்ரல் 20ஆம் தேதியும், ஆர்சிபி அணியுடனான 2வது ஆட்டம் மே 3ஆம் தேதியும் நடக்கவுள்ளது.












Click it and Unblock the Notifications