பொல்லார்ட் பரிந்துரை.. ஜெயவர்தனே எடுத்த முடிவு.. திலக் வர்மா ரிட்டையர்ட் அவுட்டாக காரணமே இதுதான்!
லக்னோ: லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணியின் நட்சத்திர வீரர் திலக் வர்மா ரிட்டையர்ட் அவுட் முறையில் வெளியேறியது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 7 பந்துகளுக்கு 24 ரன்கள் அடிக்க வேண்டிய நிலை இருந்த போது, பயிற்சியாளர் ஜெயவர்தனே, ஹர்திக் பாண்டியா உள்ளிட்டோர் திலக் வர்மாவை ரிட்டையர்ட் அவுட்டாகுமாறு வலியுறுத்தினர். ஆனால் அதற்கு முதன்மை காரணமாக பொல்லார்ட் இருந்தது தெரிய வந்துள்ளது.
ஐபிஎல் தொடரின் 16வது லீக் போட்டியில் லக்னோ அணியிடம் 12 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி தோல்வியை சந்தித்தது. கடைசி 5 ஓவர்களில் மும்பை அணியின் வெற்றிக்கு 61 ரன்கள் மட்டுமே தேவையாக இருந்ததோடு, கைவசம் 7 விக்கெட்டுகள் இருந்தன. சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா உள்ளிட்டோர் இருப்பதால், மும்பை வெற்றி நிச்சயம் என்று பார்க்கப்பட்டது.

ஆனால் தொடக்கம் முதலே திலக் வர்மாவுக்கு பேட்டிங்கில் பிரச்சனை இருந்தது. 23 பந்துகளை எதிர்கொண்ட திலக் வர்மாவால் 25 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக களத்தில் இருந்த போதும், திலக் வர்மாவால் பந்தை சரியாக கனெக்ட் செய்ய முடியவில்லை. அதேபோல் திலக் வர்மாவும் பெரிய ஷாட்களை விளையாடும் முனைப்பிலேயே இல்லை.
இதனால் கடைசி 7 பந்துகளில் 24 ரன்கள் வெற்றிக்கு தேவை என்ற போது, திலக் வர்மா ரிட்டையர்ட் அவுட்டாகி வெளியேறினார். இதற்கு பயிற்சியாளர் ஜெயவர்தனே ஓய்வறையில் இருந்து கொடுத்த சிக்னலே முதல் காரணம் என்றாலும், அந்த சிக்னலுக்கு பின் பேட்டிங் பயிற்சியாளர் பொல்லார்ட் இருந்தது தெரிய வந்துள்ளது.
உலகம் முழுவதும் டி20 லீக் போட்டிகளில் விளையாடி ஆட்டத்தின் ஒவ்வொரு நுணுக்கங்களையும் புரிந்து வைத்திருப்பவர் பொல்லார்ட். சில ஆண்டுகளுக்கு முன் டி10 லீக்கில் கூட விளையாடி இருந்தார். 2021 அபுதாபி டி10 லீக் தொடரின் இறுதிப் போட்டியில் தன்னால் ரன்கள் சேர்க்க முடியவில்லை என்பதை அறிந்து, உடனடியாக ரிட்டையர்ட் அவுட் முறையில் வெளியேறினார்.
இதனால் ஜெயவர்தனேவின் முடிவுக்கு பின் பொல்லார்ட் இருக்கலாம் என்று பார்க்கப்படுகிறது. அதேபோல் மும்பை அணி நிர்வாகம் திலக் வர்மாவை இப்படி நடத்தியது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கி வரும் மும்பை அணி, திலக் வர்மா செட்டிலான பின் இப்படி ரிட்டையர்ட் அவுட் செய்ய வைத்தது சரியா என்று ரசிகர்களிடையே விவாதம் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications