152.1 கிமீ.. ரபாடா வேகத்தில் சிதறிய ஸ்டம்புகள்.. உறைந்துபோன சூர்யகுமார் யாதவ்.. என்ன நடந்தது?
அகமதாபாத்: குஜராத் அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ரபாடா 152.1 கிமீ வேகத்தில் வீசிய பந்து சூர்யகுமார் யாதவின் ஸ்டம்புகளை சிதறடித்து சென்ற சம்பவம் ரசிகர்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது. சூர்யகுமார் யாதவ் மட்டுமல்லாமல் மும்பை அணியின் டீ காக் மற்றும் டேனிஷ் இருவரையும் பவர் பிளே ஓவர்களுக்குள் ரபாடா வீழ்த்தி அசத்தினார்.
ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் மும்பை அணியை எதிர்த்து குஜராத் அணி விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் பவுலிங்கை தேர்வு செய்தார். மும்பை அணி தரப்பில் டேனிஷ் மற்றும் கிரிஷ் பகத் ஆகிய இளம் வீரர்கள் அறிமுகம் செய்யப்பட்டனர். இதன்பின் டீ காக் - டேனிஷ் கூட்டணி தொடக்கம் கொடுத்தது.

இதன்பின் சிராஜ் வீசிய முதல் ஓவரில் 2 ரன்கள் மட்டுமே சேர்க்கப்பட்டது. இதன்பின் 2வது ஓவரை வீச ரபாடா அட்டாக்கில் கொண்டு வரப்பட்டார். அந்த ஓவரின் 2வது பந்திலேயே டீ காக் சிக்ஸ் அடித்து அசத்தினார். ஆனால் 5வது பந்தில் டேனிஷ் மாலேவர் 2 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதன்பின் நமன் திர் களமிறக்கப்பட்டார்.
சிராஜ் வீசிய 4வது ஓவரில் 2 பவுண்டரிகள் உட்பட 10 ரன்கள் சேர்க்கப்பட்டது. இவர்கள் இருவரும் இணைந்து பார்ட்னர்ஷிபை உருவாக்க முயற்சித்தனர். ஆனால் ரபாடா 149.7 கிமீ வேகத்தில் வீசிய பந்தில் டீ காக் அவரிடம் கேட்ச் கொடுத்து 13 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் மும்பை அணி 25 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இதன்பின் சூர்யகுமார் யாதவ் பேட்டிங் ஆட வந்தார். இதனால் மீண்டும் ரபாடா 3வது ஓவரை பவர் பிளேவிலேயே வீச அழைக்கப்பட்டார். ரபாடா தொடர்ச்சியாக 3 ஓவரை வீசுவதால், இந்த ஓவரில் எனர்ஜி இருக்காது என்று பார்க்கப்பட்டது. ஆனால் இந்த ஓவரின் 5வது பந்தை ரபாடா 152.1 கிமீ வேகத்தில் வீசினார். அந்த பந்து நேராக ஸ்டம்புகளை தகர்த்து சென்றது. ஸ்டம்புகள் சிதறியது என்றே சொல்லலாம்.
இதனால் ஒரு நொடி சூர்யகுமார் யாதவ் உறைந்துபோனார். இதனால் சூர்யகுமார் யாதவ் 15 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்த சீசனில் சூர்யகுமார் யாதவ் இதுவரை சொல்லிக் கொள்ளும்படி ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. இதனால் மும்பை அணி 44 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ரபாடாவின் வேகம் மும்பை அணி ரசிகர்களை மிரள வைத்துள்ளது.












Click it and Unblock the Notifications