இதுக்கு பேருதான் ஆதிக்கம்.. ஆர்சிபிக்கு எதிராக 3வது முறை.. பவர்பிளேயிலேயே சுருண்ட கில் - சுதர்சன்!
அகமதாபாத்: ஐபிஎல் தொடரின் இந்த சீசனில் குஜராத் அணியின் தொடக்க வீரர்களான சுப்மன் கில் மற்றும் சாய் சுதர்சன் இருவருமே பவர் பிளே ஓவர்களுக்குள் 4வது முறையாக ஆட்டமிழந்துள்ளனர். அதில் ஆர்சிபி அணிக்கு எதிராக 3வது முறையாக இப்படி இருவரும் பவர் பிளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்துள்ளனர். இதனால் ஆர்சிபி அணி இரு பேட்ஸ்மேன்கள் மீதும் ஆதிக்கம் செலுத்துவதாக பார்க்கப்படுகிறது.
ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் ஆர்சிபி அணியை எதிர்த்து குஜராத் அணி விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணியின் கேப்டன் ரஜத் பட்டிதார் பவுலிங்கை தேர்வு செய்தார். இதன்பின் குஜராத் அணிக்காக களமிறங்கிய சுப்மன் கில் 10 ரன்களிலும், சாய் சுதர்சன் 12 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறி இருக்கின்றனர்.

இந்த 2026 ஐபிஎல் சீசன் முழுவதும் குஜராத் அணியின் ரன் மெஷினாக இருந்த கில் மற்றும் சாய் சுதர்சன் ஜோடி, பவர்பிளே ஓவர்களுக்குள் ஒன்றாக ஆட்டமிழந்து வெளியேறுவது இது 4-வது முறையாகும். இதில் கொடுமை என்னவென்றால், இந்த 4 முறைகளில் 3 முறை ஆர்சிபி அணிக்கு எதிராகவே இந்த ஜோடி பவர்பிளே ஓவர்களுக்குள் சுருண்டுள்ளது.
லீக் சுற்று, குவாலிபையர் 1 மற்றும் இன்று நடைபெறும் மாபெரும் இறுதிப்போட்டி என மூன்று முக்கிய ஆட்டங்களிலுமே இந்த இரண்டு டாப் பேட்ஸ்மேன்களையும் பவர்பிளே ஓவர்களுக்குள்ளேயே பெவிலியனுக்கு அனுப்பி, ஆர்சிபி கேப்டன் ரஜத் படிதாரின் பந்துவீச்சு வியூகம் 100% பலன் தந்துள்ளது. டி20 கிரிக்கெட்டில் பவர்பிளே ஓவர்களில் விக்கெட் விழாமல் தடுப்பதே ஒரு அணியின் வெற்றிக்கு அடித்தளம்.
ஆனால், சுப்மன் கில் மற்றும் சாய் சுதர்சன் ஆகிய இருவருமே ஆர்சிபி பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ளும் போது தங்களது விக்கெட்டுகளை மிக எளிதாகத் தாரைவார்த்து விடுகிறார்கள். ஆர்சிபி அணி இந்த இரு பேட்ஸ்மேன்கள் மீதும் உளவியல் ரீதியாக முழு ஆதிக்கம் செலுத்துகிறது என்பதற்கு இந்த புள்ளிவிவரமே சாட்சியாக அமைந்துள்ளது.
சாய் சுதர்சன் இந்தப் போட்டியில் தொடக்கம் முதலே நிதானமின்றி காணப்பட்டார். பவர் பிளேவை முழுமையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்பதில் தீவிரம் காட்டிய சாய் சுதர்சன், புவனேஷ்வர் குமார் பந்தை அட்டாக் செய்ய முயன்று விக்கெட்டை பறிகொடுத்தார். இதனால் ஆர்சிபி அணியின் வெற்றி கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கிறது.












Click it and Unblock the Notifications