மேத்யூ ஷார்ட்.. ஒரேயொரு வீரரால் வந்த தோல்வி.. சிஎஸ்கே எடுத்த தவறான முடிவு.. பின்னணியில் பிளமிங்!
மும்பை: ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி அடைந்த தோல்விக்கு, சென்னை அணி எடுத்த சில தவறான முடிவுகளே காரணமாக அமைந்துள்ளது. அகீல் ஹொசைனுக்கு பதிலாக ஷார்ட்டை கொண்டு வந்தது, டிவால்ட் பிரெவிஸை நம்பர் 4 திசையில் பேட்டிங் செய்ய அனுப்பாதது உள்ளிட்டவையும் தோல்விக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.
ஐபிஎல் தொடரில் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 194 ரன்களை சேர்த்தது. இதன்பின் களமிறங்கிய சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 184 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது.

சிஎஸ்கே அணி வெல்ல வேண்டிய போட்டியில், வெற்றியை ஐதராபாத் அணிக்கு தாரை வார்த்துவிட்டது. ஏனென்றால் சிஎஸ்கே அணியின் தோல்விக்கு அந்த அணி களத்திற்கு வெளியில் எடுத்த சில மோசமான முடிவுகளே காரணமாக அமைந்துவிட்டது. முதலில் அகீல் ஹொசைன் இடத்தில் மேத்யூ ஷார்ட் சேர்க்கப்பட்டது மிகப்பெரிய தவறாக மாறி இருக்கிறது.
மேத்யூ ஷார்ட் இன்னும் இந்திய ஆடுகளங்களுக்கு ஏற்ப மாறவில்லை. ஆனால் ஐதராபாத் அணியின் டாப் 3ல் இடதுகை பேட்ஸ்மேன்கள் இருப்பதால், ஷார்ட் ஆஃப் ஸ்பின் வீசுவார் என்ற ஒரே காரணத்திற்காக சிஎஸ்கே பிளேயிங் லெவனில் கொண்டு வரப்பட்டார். இதனால் அவர் 3 ஓவர்கள் வீசி 38 ரன்களை வாரி வழங்கியதோடு, பேட்டிங்கில் 30 பந்துகளை எதிர்கொண்டு 34 ரன்களை மட்டுமே சேர்த்தார்.
மேத்யூ ஷார்ட் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன். இதனால் வேறு வழியின்றி நம்பர் 4 பேட்டிங் வரிசையில் களமிறங்கினார். இதனால் சர்ஃபராஸ் கான், டிவால்ட் பிரெவிஸ் உள்ளிட்டோரின் பேட்டிங் வரிசையை மாற்ற வேண்டிய தேவை எழுந்தது. மேத்யூ ஷார்ட் களத்தில் இருந்த போது பவுண்டரிகள் அடிக்கவே சிரமப்பட்டனர். இன்னொரு பக்கம் ஆயுஷ் மாத்ரேவின் ஹாம்ஸ்ட்ரிங் காயம் பின்னடைவாக அமைந்தது.
அவரை ரிட்டையர்ட் ஹர்ட் செய்து பெஞ்சில் அமர வைத்திருக்க வேண்டும். ஆனால் பிசியோ மற்றும் கேப்டன் எடுத்த தவறான முடிவால் இன்னொரு முக்கியமான விக்கெட்டை சிஎஸ்கே இழக்க நேரிட்டது. இதனால் வரும் போட்டிகளில் மேட்ச் அப் என்ற பெயரில் சிஎஸ்கே பிளேயிங் லெவனை மாற்றாமல் இருந்தாலே, சென்னை அணியால் எளிதாக வெல்ல முடியும் என்று பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications