6 போட்டிகள்.. 73 பந்துகளில் 82 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ள ருதுராஜ்.. கொடூர பார்மில் சிஎஸ்கே கேப்டன்!
ஐதராபாத்: ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 6 போட்டிகளில் விளையாடி 73 பந்துகளை எதிர்கொண்டு 82 ரன்களை மட்டும் சேர்த்திருப்பது ரசிகர்களிடையே விமர்சனத்தை பெற்று வருகிறது. சஞ்சு சாம்சன் மற்றும் ஆயுஷ் மாத்ரே சிறப்பாக ஆடி வரும் சூழலில், ருதுராஜ் கெய்க்வாட் சிறந்த பங்களிப்பை அளித்தால் சிஎஸ்கே அணியால் எளிதாக வெற்றிகளை பெற முடியும்.
ஐபிஎல் தொடரில் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 194 ரன்களை விளாசியது. சிறப்பாக ஆடிய அபிஷேக் சர்மா மற்றும் கிளாசன் இருவரும் தலா 59 ரன்களை சேர்த்தனர். சிஎஸ்கே அணி தரப்பில் அன்சுல் கம்போஜ் மற்றும் ஓவர்டன் இருவரும் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இதன்பின் களமிறங்கிய சிஎஸ்கே அணியில் தொடக்க வீரர் சஞ்சு சாம்சன் 7 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதனால் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையில் பொறுப்பு விழுந்தது. இந்த சீசனில் ருதுராஜ் கெய்க்வாட் மோசமான ஃபார்மில் இருக்கிறார். பவர் பிளேவில் பேட்டிங் ஆடிய போதும், அவரால் ரன்களை சேர்க்க முடியவில்லை.
இதனால் ருதுராஜ் கெய்க்வாட்க்கு கேப்டன்சி அழுத்தம் இருப்பதாக பார்க்கப்பட்டது. இந்த போட்டியில் ஆயுஷ் மாத்ரே மறுபக்கம் அதிரடியாக ஆடி 13 பந்துகளில் 30 ரன்களை விளாசி தள்ளினார். இதன்பின் இன்னிங்ஸை பொறுப்புடன் ருதுராஜ் கெய்க்வாட் கட்டமைத்து செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட போது, 13 பந்துகளில் 19 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
இது சிஎஸ்கே ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏனென்றால் ருதுராஜ் கெய்க்வாட் தொடர்ந்து 6வது போட்டியாக சொதப்பி இருக்கிறார். இந்த சீசனில் மொத்தமாக ருதுராஜ் கெய்க்வாட் 73 பந்துகளை எதிர்கொண்டுள்ள நிலையில், 82 ரன்களை மட்டுமே சேர்த்திருக்கிறார். விராட் கோலிக்கு நிகரான கன்சிஸ்டன்சியுடன் ஆடி வந்த ருதுராஜ் கெய்க்வாட், இந்த சீசனில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
இதனால் ருதுராஜ் கெய்க்வாட் பேட்டிங்கில் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும் என்று பார்க்கப்படுகிறது. ருதுராஜ் கெய்க்வாட் பேட்டிங்கில் ஃபார்முக்கு வந்துவிட்டால், சிஎஸ்கே அணியை யாராலும் தடுக்க முடியாது. இதனை உணர்ந்து அடுத்தப் போட்டியிலாவது அவர் அதிரடியாக ஆடி ஃபார்முக்கு வர வேண்டும் என்று ரசிகர்கள் அறிவுறுத்த தொடங்கியுள்ளனர்.












Click it and Unblock the Notifications