நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்!
அகமதாபாத்: இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கொடுத்த அட்வைஸ் மற்றும் அவரின் ஆலோசனைகள் குறித்து சஞ்சு சாம்சன் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார். எனக்கு ஆதரவாக இருந்த ஒவ்வொரு நபருக்கும் நன்றி என்று கூறியுள்ள சஞ்சு சாம்சன், இந்தவொரு தருணத்தை வாழ்வின் பல்வேறு தருணங்களில் காட்சிகளாக நினைத்து பார்த்துள்ளேன் என்றும் தெரிவித்துள்ளார்.
2026ஆம் ஆண்டுக்கான ஐசிசி டி20 உலகக்கோப்பையை வென்று இந்திய அணி புதிய வரலாறு படைத்துள்ளது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 255 ரன்களை குவித்தது. இதன்பின் களமிறங்கிய நியூசிலாந்து அணி 19 ஓவர்களில் வெறும் 159 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது. இந்தப் போட்டியில் சிறப்பாக பவுலிங் செய்த பும்ரா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

4 ஓவர்களில் 15 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். அதேபோல் ஹாட்ரிக் அரைசதம் விளாசி இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்த சஞ்சு சாம்சன் தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன்பின் சஞ்சு சாம்சன் பேசுகையில், இதுவொரு கனவு போல் இருக்கிறது. என்ன வார்த்தை பேசுவது என்று தெரியவில்லை.
இந்த பயணம் 2 ஆண்டுகளுக்கு முன்பாக தொடங்கியது. 2024 டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியில் இடம்பிடித்த போதும், நான் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. இருந்தாலும் நான் தொடர்ந்து இப்படியான தருணங்களை காட்சிகளாக கற்பனை செய்து பார்ப்பேன். கடுமையாக உழைத்தேன்.. இதனை செய்யவே போராடினேன்.. ஆனால் நியூசிலாந்து தொடருக்கு பின் உடைந்துவிட்டேன்.
எனது கனவுகள் மொத்தமாக கண்ணாடி போல் உடைந்து சிதறிவிட்டது.. என்ன செய்வது என்று கூட தெரியவில்லை.. ஆனால் கடவுள் எனக்கு வேறு ஒரு திட்டத்தை வைத்திருக்கிறார்.. ஆனால் மிகப்பெரிய கனவை நோக்கி உழைத்ததற்கான பலனை எனக்கு கடவுள் கொடுத்துள்ளார். முன்னாள் வீரர்கள் பலரும் என்னை தொடர்பு கொண்டு ஆலோசனை வழங்கினார்கள். எனக்கு உதவி செய்தார்கள்.
அதுமட்டுமல்லாமல் கடந்த 2 மாதங்களாக சச்சின் சாருடன் தொடர்ந்து பேசி வருகிறேன்.. அவருடன் தினமும் நீண்ட நேரம் உரையாடுவதற்கான வாய்ப்புகள் அமைந்தது. சச்சின் போன்ற ஒருவர் வழிகாட்டியாக இருந்த போது, நமக்கு வேறு என்ன தேவை.. எனக்கு ஆதரவாக இருந்த ஒவ்வொருவருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். இந்த சாதனையே எனக்கு மிகப்பெரியது. இதனை மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications