ஸ்ரேயாஸ் ஐயர் அருமை இப்போ தெரியுதா.. முதல் வெற்றியை கூட பெற முடியலை.. புலம்பும் கேகேஆர் அணி!
சென்னை: சென்னை அணிக்கு எதிரான போட்டியில் கேகேஆர் அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்துள்ளது. இந்த ஐபிஎல் தொடரில் இதுவரை 5 போட்டிகளில் விளையாடியுள்ள கேகேஆர் அணி, இன்னும் முதல் வெற்றியையே பெறவில்லை. இதனால் கேகேஆர் அணியின் ரசிகர்கள் பலரும் ஸ்ரேயாஸ் ஐயரை ரிலீஸ் செய்தது ஏன் என்று அணி நிர்வாகத்தை நோக்கி எழுப்பி வருகின்றனர்.
ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் 32 ரன்கள் வித்தியாசத்தில் கேகேஆர் அணி தோல்வி அடைந்துள்ளது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 192 ரன்களை சேர்த்தது. இதன்பின் களமிறங்கிய கேகேஆர் அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 160 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.

இதனால் கேகேஆர் அணி இந்த சீசனில் 4வது தோல்வியை அடைந்துள்ளது. இதுவரை 5 போட்டிகளில் ஆடியுள்ள கேகேஆர் அணி 4 தோல்வி, ஒரு போட்டி மழையால் கைவிடப்பட்டு ஒரு புள்ளியுடன் கடைசி இடத்தில் இருக்கிறது. இதனால் தொடர்ந்து 2வது சீசனாக கேகேஆர் அணி ரசிகர்கள் புலம்ப தொடங்கியுள்ளனர். ரூ.25 கோடி கொடுத்து வாங்கப்பட்ட கேமரூன் க்ரீன் இதுவரை ஒரு போட்டியில் கூட சரியாக விளையாடவில்லை.
அதேபோல் ரூ.18 கோடி கொடுத்து வாங்கப்பட்ட பதிரானாவும் இன்னும் கேகேஆர் அணியில் இணையவில்லை. பேட்டிங்கிலும் போதுமான அளவிற்கு அதிரடி வீரர்கள் இல்லாமல், அந்த அணி தடுமாறி வருகிறது. 2024ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் கேகேஆர் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இருந்தாலும் அந்த அணி ஸ்ரேயாஸ் ஐயரை ரீடெய்ன் செய்யவில்லை.
இதன்பின் பஞ்சாப் அணிக்கு சென்ற ஸ்ரேயாஸ் ஐயர், கடந்த முறை அந்த அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்து சென்றார். அதேபோல் இந்த சீசனிலும் பஞ்சாப் அணி 4 போட்டிகளில் 3 வெற்றி உட்பட 7 புள்ளிகளை பெற்று புள்ளிப் பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது. இந்த முறையும் பஞ்சாப் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்று பார்க்கப்படுகிறது.
ஆனால் கேகேஆர் அணியோ முதல் வெற்றியை பெறவே மிகப்பெரிய தடுமாற்றத்தை அடைந்து வருகிறது. அதேபோல் கேகேஆர் அணி நிர்வாகம் செய்த தவறுக்கு இந்த சீசன் மிகப்பெரிய தோல்வியை அடையும் என்றும் ரசிகர்கள் பேசத் தொடங்கியுள்ளனர். பாதி ஐபிஎல் சீசன் முடிவடைய இருக்கும் சூழலில், கேகேஆர் அணியால் இதுவரை வின்னிங் காம்பினேஷனையே கண்டறிய முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications