அகமதாபாத் பிட்ச்னா போதும்.. சுப்மன் கில்லை கையிலேயே பிடிக்க முடியாது.. 27 பந்துகளில் அரைசதம்!
அகமதாபாத்: கேகேஆர் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் 27 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில் 50 பந்துகளில் 4 சிக்ஸ், 8 பவுண்டரி உட்பட 86 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார்.
ஐபிஎல் தொடரின் 25வது லீக் போட்டியில் கேகேஆர் அணியை எதிர்த்து குஜராத் அணி விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற கேகேஆர் அணியின் கேப்டன் ரஹானே பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்பின் களமிறங்கிய கேகேஆர் அணி 20 ஓவர்களில் 180 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது. சிறப்பாக ஆடிய கேமரூன் க்ரீன் 55 பந்துகளில் 79 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

இதன்பின் 181 ரன்கள் என்ற எளிய இலக்குடன் குஜராத் அணியின் சுப்மன் கில் - சாய் சுதர்சன் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. இதில் கார்த்திக் தியாகி வீசிய 2வது ஓவரிலேயே 2 பவுண்டரிகளை விளாசி சுப்மன் கில் அதிரடியாக தொடங்கினார். தொடர்ந்து அனுகுல் ராய் வீசிய 3வது ஓவரில் 2 சிக்சரை சுப்மன் கில்லும், சாய் சுதர்சன் ஒரு சிக்சரையும் விளாசினர்.
இதனால் பவர் பிளே ஓவர்கள் முடிவில் சுப்மன் கில் 15 பந்துகளில் 34 ரன்களை சேர்த்தார். இதையடுத்து சுப்மன் கில்லின் அதிரடி சற்று குறைந்தது. 7வது ஓவருக்கு பின் சுப்மன் கில் ஒவ்வொரு ரன்னாக எடுக்க தொடங்கினார். அதிலும் 44 ரன்களை எட்டிய பின், சுப்மன் கில் அரைசதத்தை எடுக்க 8 பந்துகளை எடுத்துக் கொண்டார். இதன்பின் மீண்டும் அதிரடி மோடுக்கு திரும்பினார்.
ஒவ்வொரு ஓவரிலும் சிக்ஸ், பவுண்டரி என்று விளாசி தள்ளினார். சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில் 50 பந்துகளில் 4 சிக்ஸ், 8 பவுண்டரி உட்பட 86 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். அகமதாபாத் மைதானத்தில் சுப்மன் கில்லின் ரெக்கார்ட் உச்சத்தில் இருக்கிறது. அதேபோல் ஐபிஎல் தொடரில் சுப்மன் கில்லின் ஹாட்ரிக் அரைசதம் இதுவாகும்.
இருந்தாலும் டி20 கிரிக்கெட்டில் 50 பந்துகளை எதிர்கொள்ளும் வீரர்கள் 200 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாட வேண்டும். அப்போதுதான் அது அந்த அணிக்கு பயனுள்ள இன்னிங்ஸாக அமையும். இன்றைய இன்னிங்ஸிலும் சுப்மன் கில்லின் ஸ்ட்ரைக் 172 ஆக மட்டுமே இருக்கிறது. அரைசதத்திற்கு பின் சுப்மன் கில்லின் அதிரடி சற்று குறைவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.












Click it and Unblock the Notifications