நீதான்யா பயிற்சியாளர்.. 2 ஐசிசி கோப்பையை முதல்முறையாக வென்ற முதல் இந்திய பயிற்சியாளரான கம்பீர்!
மும்பை: இந்திய கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக 2 ஐசிசி கோப்பைகளை வென்ற முதல் பயிற்சியாளர் என்ற சாதனையை கவுதம் கம்பீர் படைத்துள்ளார். 2025ஆம் ஆண்டு நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை கம்பீர் கைப்பற்றிய சூழலில், தற்போது சொந்த மண்ணில் நடந்த டி20 உலகக்கோப்பையை வென்று வரலாறு படைத்துள்ளார்.
2026ஆம் ஆண்டு ஐசிசி டி20 உலகக்கோப்பையை இந்திய அணி வென்று புதிய வரலாறு படைத்துள்ளது. ஏற்கனவே 2007, 2024 ஆகிய ஆண்டுகளில் நடந்த டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணி, தற்போது சொந்த மண்ணில் நடந்த டி20 உலகக்கோப்பையை வென்று சரித்திரம் படைத்துள்ளது. இது இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

நியூசிலாந்து அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 255 ரன்களை குவித்தது. சிறப்பாக ஆடிய நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சன் 46 பந்துகளில் 8 சிக்ஸ், 5 பவுண்டரி உட்பட 89 ரன்களை விளாசினார். அதேபோல் இஷான் கிஷன் 54 ரன்களையும், அபிஷேக் சர்மா 52 ரன்களையும் குவித்தனர்.
இதனையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி 72 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இறுதியாக 19 ஓவர்களில் 159 ரன்கள் எடுத்து தோல்வியை சந்தித்தது. இதையடுத்து 3வது முறையாக டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணி வீரர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல் அகமதாபாத்தில் மைதானத்தில் குவிந்திருந்த ரசிகர்களும் கரகோஷம் எழுப்பி கொண்டாடினர்.
இதனிடையே இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மிகப்பெரிய வரலாற்று சாதனையை படைத்துள்ளார். அதாவது இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக 2 ஐசிசி டிராபியை வென்ற முதல் பயிற்சியாளர் என்ற சரித்திரம் படைத்திருக்கிறார். இதற்கு முன்பாக 2025ஆம் ஆண்டு நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை கம்பீர் கைப்பற்றினார்.
1983 உலகக்கோப்பையில் இந்திய அணிக்கு மேனேஜர் மட்டுமே இருந்தார். ஆனாலும் பிஆர் மான் சிங் இன்றும் நினைவு கூரப்படுகிறார். இதன்பின் 2002 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை இந்திய அணி வென்ற போது ஜான் ரைட் பயிற்சியாளராக இருந்தார். தொடர்ந்து 2007 டி20 உலகக்கோப்பையை இந்திய அணி வென்ற போது லால்சந்த் ராஜ்புட் பயிற்சியாளராக இருந்தார்.
இதன்பின் 2011ஆம் ஆண்டு இந்திய உலகக்கோப்பையை வென்ற போது கேரி கிறிஸ்டன் பயிற்சியாளராக இருந்தார். தொடர்ந்து 2013 சாம்பியன்ஸ் டிராபியை இந்திய அணி வென்ற போது டங்கன் ஃபிளட்சர் பயிற்சியாளராக இருந்தார். இதையடுத்து 2024 டி20 உலகக்கோப்பையை ராகுல் டிராவிட் பயிற்சியின் கீழ் இந்திய அணி வென்றது.












Click it and Unblock the Notifications