ஷார்ட் பால் பிரச்சனை.. சரிசெய்ய உதவியதே தோனி கொடுத்த ஐடியா தான்.. சிவம் துபே ஷேரிங்ஸ்!
மும்பை: எனக்கு இருந்த ஷார்ட் பால் பிரச்சனையை சரி செய்ய தோனி கொடுத்த ஐடியா தான் உதவியதாக இந்திய வீரர் சிவம் துபே தெரிவித்துள்ளார். ஷார்ட் பாலில் சிக்சர் அடிக்க தேவையில்லை என்று தோனி கூறியதாகவும், அந்த பந்துகளில் ஒரு ரன் எடுத்தால் கூட போதும் என்று அறிவுறுத்திய பின், பேட்டிங் பயிற்சியாளருடன் பயிற்சியை தொடங்கியதாக துபே தெரிவித்துள்ளார்.
நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. இந்தப் போட்டியில் சிவம் துபே 31 பந்துகளில் 6 சிக்ஸ் உட்பட 66 ரன்களை விளாசி தள்ளினார். அதுமட்டுமல்லாமல் பவுலிங்கில் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருக்கிறார். முன்பை விடவும் சிவம் துபே இந்திய அணியின் முக்கிய ஆல்ரவுண்டராக மாறி இருக்கிறார்.

அதேபோல் ஸ்பின் ஹிட்டராக அறியப்பட்ட சிவம் துபே, இப்போது வேகப்பந்துவீச்சாளர்களையும் ஒரு கை பார்த்துவிடுகிறார். அதுமட்டுமல்லாமல் தொடர்ச்சியாக இந்திய டார் ஆர்டர் சொதப்பும் போதெல்லாம் சிவம் துபே நம்பிக்கை நட்சத்திரமாக மாறி இருக்கிறார். அதேபோல் தன்னுடைய வீக்னஸ்ஸாக பார்க்கப்பட்ட ஷார்ட் பால் பிரச்சனையையும் எளிதாக சரி செய்திருக்கிறார்.
இந்த மாற்றம் எப்படி நடந்தது என்று சிவம் துபேவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சிவம் துபே பேசுகையில், ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக விளையாடிய போது ஷார்ட் பால்களை எதிர்கொள்ள தடுமாறியது உண்மை தான். ஆனால் இந்திய அணிக்காக தொடர்ந்து விளையாட வேண்டுமென்றால், அந்த சிக்கலை சரி செய்ய வேண்டும் என்பதை அறிந்தே இருந்தேன்.
அதேபோல் என்னுடைய பலம் என்ன என்பதையும் நன்றாக அறிந்து வைத்திருந்தேன். ஆஃப் சீசனில் ஷார்ட் பால்களை வீச வைத்து அதிகமாக பயிற்சி மேற்கொண்டேன். ஒருமுறை தோனி என்னிடம் வந்து, ஷார்ட் பால்கள் வீசப்பட்டால், அதில் சிக்ஸ் அடிக்க வேண்டும் என்பது கட்டாயம் கிடையாது. அந்த பந்துகளில் ஒரு ரன்னோ அல்லது பவுண்டரியோ கூட அடிக்கலாம். அது எனக்கு ஒரு புதிய வெளியை திறந்துவிட்டது.
எளிதாக ஃபீல்டர்களுக்கு இடையில் அடிக்க தொடங்கினேன். ஒருவேளை ஹிட்டிங் ஏரியாவில் பந்து வந்தால், நிச்சயம் விளாசிவிடுவேன். அதன் காரணமாகவே ஒவ்வொரு இன்னிங்ஸின் தொடக்கத்தின் போது சிங்கிள் மற்றும் பவுண்டரிகளை அதிகமாக அடிக்க தொடங்கியுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications