இந்திய அணி தோற்கும்.. எவ்வளவு பந்தயம் சொல்லுங்க.. பாகிஸ்தான் வீரர் முகமது ஆமீர் மீண்டும் சவால்!
மும்பை: நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி தோற்கும் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் முகமது ஆமீர் கணித்துள்ளார். நியூசிலாந்து அணி ஒரு குழுவாக இணைந்து சிறப்பாக செயல்படுவதாக கூறிய முகமது ஆமீர், இந்திய அணி சஞ்சு சாம்சன் மற்றும் பும்ரா ஆகிய இருவரால் மட்டுமே வெல்வதாகவும் தெரிவித்துள்ளார்.
டி20 உலகக்கோப்பைத் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் விளையாட உள்ளன. அகமதாபாத் மைதானத்தில் நடக்கும் இந்தப் போட்டியை காண ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். இந்திய அணி 3வது முறையாக டி20 உலகக்கோப்பையை வெல்லுமா அல்லது நியூசிலாந்து முதல்முறையாக ஐசிசி டி20 உலகக்கோப்பை சாம்பியனாகுமா என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

இரு அணிகளுமே சமபலம் வாய்ந்த அணிகள் என்பதால், போட்டியில் அனல் பறக்கும் என்பதில் எந்தவித சந்தேமும் இல்லை. இந்த நிலையில் இந்தப் போட்டியில் யார் வெல்வார்கள் என்று பல்வேறு தரப்பினரும் தங்களின் கணிப்புகளை வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் பாகிஸ்தான் முன்னாள் வீரர் முகமது ஆமீர் ஒரு கணிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
அதில் முகமது ஆமீர் பேசுகையில், அரையிறுதியில் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான நியூசிலாந்து ஒரு முழுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஒரு குழுவாக இணைந்து சிறப்பாக ஆடினார்கள். ஆனால் இந்திய அணியை பாருங்கள்.. பும்ரா மற்றும் சஞ்சு சாம்சன் ஆகிய தனி வீரர்களின் பெரிய ஆட்டத்தால் வென்றுள்ளார்கள். அகமதாபாத் மைதானமும் நியூசிலாந்து வீரர்களுக்கு பொருந்தி போகும்.
அதேபோல் இந்திய பவுலிங்கை விடவும் நியூசிலாந்து பவுலர்கள் நல்ல ஃபார்மில் இருக்கிறார்கள். இந்திய அணியில் பும்ரா மட்டுமே சிறப்பாக செயல்பட்டு வருகிறார். வருண் சக்கரவர்த்தி மற்றும் ஹர்திக் பாண்டியா இருவருமே தடுமாறி வருகிறார்கள். இரு அணிகளும் சிறந்த பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள். நல்ல ஃபார்மில் உள்ள பேட்ஸ்மேன்கள் உள்ளனர்.
ஆனால் குழுவாக பார்க்கும் போது நியூசிலாந்து அணி சிறந்ததாக தெரிகிறது. அதனால் நியூசிலாந்து அணி முதல்முறையாக டி20 உலகக்கோப்பையை வெல்லும் என்று நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார். ஏற்கனவே வெஸ்ட் இண்டீஸ் அணிக்காகவும், இங்கிலாந்து அணிக்காகவும் சப்போர்ட் செய்த முகமது ஆமீர், இம்முறை நியூசிலாந்து அணிக்கு ஆதரவாக கணித்துள்ளார்.












Click it and Unblock the Notifications