வைபவ் சூர்யவன்ஷியின் பலவீனம் இதுதான்.. குறி வைக்கும் குஜராத் அணி.. சாதிப்பாரா சிராஜ்?
சண்டிகர்: ராஜஸ்தான் அணியின் இளம் அதிரடி வீரரான வைபவ் சூர்யவன்ஷியின் விக்கெட்டை விரைவாக வீழ்த்த குஜராத் அணி திட்டமிட்டுள்ளது. ஐதராபாத் அணிக்கு எதிரான எலிமினேட்டர் போட்டியில் தனியாளாக வைபவ் சூர்யவன்ஷி ஆட்டத்தை மாற்றியதால், குவாலிஃபையர் 2 போட்டியில் குஜராத் அணி கூடுதல் எச்சரிக்கையுடன் களமிறங்க உள்ளது.
ஐபிஎல் 2026 எலிமினேட்டர் போட்டியில் ஐதராபாத் அணிக்கு எதிராக வெறும் 29 பந்துகளில் 12 சிக்சர்களுடன் 97 ரன்கள் விளாசி ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் தன் பக்கம் திருப்பியுள்ளார் ராஜஸ்தான் அணியின் 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி. நடப்பு சீசனில் கிறிஸ் கெய்லின் 14 ஆண்டுகால சிக்சர் சாதனையை உடைத்து சரித்திரம் படைத்துள்ளார்.

இதனால் அவரின் விக்கெட்டை விரைவாக வீழ்த்த வேண்டும் என்பதில் குஜராத் அணி குறியாக இருக்கிறது. வைபவ் சூர்யவன்ஷியின் பலவீனங்கள் குறித்து ஆய்வுகள் விவாதிக்கப்பட்டு வருகிறது. டெக்னிக்கலாக பார்த்தால், வைபவ் சூர்யவன்ஷிக்கு ப்ரண்ட்-பூட் ஆட்டம் என்பது ஜீரோ. அவர் பந்துகளை எதிர்கொள்ளும் போது கால்களை முன்னோக்கி நகர்த்தினாலும், அவரது உடலின் எடை எப்போதும் பின்னோக்கி தான் இருக்கும்.
பந்தை தரையோடு தரையாக டிரைவ் செய்யத் தெரியாமல் இருப்பது எந்த பேட்ஸ்மேனுக்கும் பெரிய பலவீனமாக கருதப்படும். ஆனால் வைபவ் சூர்யவன்ஷி இந்த பலவீனத்தையே தன் பலமாக மாற்றியுள்ளார். எப்போதுமே பந்தை பேக்-பூட்டில் நின்றுகொண்டு எதிர்கொள்வதால், பந்து வீச்சாளர்கள் 'ஃபுல் லெந்த்' வீசினாலும், 'ஷார்ட் லெந்த்' வீசினாலும், அவருக்கு எல்லாமே சிக்சர் அடிக்கும் தூரத்திலேயே வந்து விழுகிறது.
பந்துவீச்சாளர்களின் வேகத்தை வைத்தே அவர் பந்துகளைத் துவம்சம் செய்கிறார். நடப்பு சீசனில் சில போட்டிகளில் டெல்லி கேபிடல்ஸ் போன்ற அணிகளுக்கு எதிராக ஸ்லோவர் பந்துகளில் வைபவ் ஆட்டமிழந்துள்ளார். பந்தின் வேகத்தை மாற்றி வீசும்போது அவர் சற்றே தடுமாறுவதாக பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோரும் உறுதி செய்துள்ளார்.
வைபவ் கைகளை நீட்டி அடிக்க முடியாதபடி ஆஃப் டூ மிடில் அல்லது மிடில் ஸ்டம்ப் லைனில் 'குட் லெந்த்' பந்துகளை வீசி, அவரை ஒரே இடத்தில் முடக்குவதுதான் அவரை வீழ்த்துவதற்கான சிறந்த திட்டமாக பார்க்கப்படுகிறது. மேலும், சுழற்பந்து வீச்சிற்கு எதிராகவும் அவர் சில போட்டிகளில் விக்கெட்டுகளை இழந்துள்ளார். பவர் பிளே ஓவர்களிலேயே வைபவ் சூர்யவன்ஷியின் விக்கெட்டை வீழ்த்திட வேண்டும்.
ஒருவேளை பவர் பிளேவை முழுமையாக வைபவ் சூர்யவன்ஷி விளையாடிவிட்டால், எளிதாக அரைசதத்தை கடந்துவிடுவார். அதன்பின் வைபவ் சூர்யவன்ஷி மிஸ் டைமில் ஏதாவது ஷாட் ஆடி ஆட்டமிழந்தால் மட்டுமே உண்டு. இதனால் குஜராத் அணி எச்சரிக்கையுடன் திட்டங்களை உருவாக்கி களமிறங்கும் என்று பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications
