வெறித்தனமான விஜய் ரசிகன் நான்.. ஆனால் தவெகவுக்கு ஓட்டு போட மாட்டேன்.. வருண் சக்கரவர்த்தி ஓபன் டாக்!
சென்னை: நடிகர் விஜயின் தீவிர ரசிகராக இருந்தாலும் கூட, அவருக்கு ஓட்டு போடுவேனா என்பதை உறுதி சொல்ல முடியாது என்று இந்திய கிரிக்கெட் வீரர் வருண் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார். அரசியலில் களமிறங்கியது முதல் மக்கள் மத்தியில் விஜய் சிறந்த தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பதாகவும் வருண் சக்கரவர்த்தி கூறி இருக்கிறார்.
இந்திய அணியின் முன்னணி ஸ்பின்னர்களில் ஒருவர் வருண் சக்கரவர்த்தி. டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக விளையாடி வரும் வருண் சக்கரவர்த்தி, அண்மையில் சாம்பியன்ஸ் டிராபி தொடரை இந்திய வெல்ல முக்கிய காரணமாக அமைந்தார். அதேபோல் ஐபிஎல் தொடரிலும் கேகேஆர் அணிக்காக சிறந்த தாக்கத்தை வருண் சக்கரவர்த்தி ஏற்படுத்தி இருந்தார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த வருண் சக்கரவர்த்தி, இளம் கிரிக்கெட் வீரர்கள் பலருக்கும் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறார். இவர் தொடக்கக் காலம் முதலே தன்னை விஜய் ரசிகராகவே அடையாளப்படுத்தி வந்துள்ளார். விஜயின் தீவிர ரசிகராக அறியப்படும் வருண் சக்கரவர்த்தி, தலைவா படத்தில் வரும் விஜயின் போஸ்டர் மற்றும் டைம் டூ லீட் என்ற வாசகத்தை கைகளில் டாட்டூ போட்டு கொண்டவர்.
அதேபோல் சினிமாவில் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ள வருண் சக்கரவர்த்தி, விஜயை ஒருமுறை இயக்க வேண்டும் என்ற ஆசையையும் வெளிப்படுத்தி இருக்கிறார். இந்த நிலையில் விஜய் நடிப்பில் இருந்து விலகி, அடுத்ததாக அரசியலில் கால் பதித்துள்ளார். சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்களே உள்ள நிலையில், ஆகஸ்ட் 25ஆம் தேதி மதுரையில் 2வது மாநில மாநாட்டை நடத்தத் தயாராகி வருகிறார்.
அந்த மாநாட்டிலேயே முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை விஜய் வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் இளைஞர்கள், மாணவிகள், பெண்கள் மத்தியில் விஜய்க்கு வரவேற்பு உள்ளது. இந்த நிலையில் இந்திய முன்னாள் வீரர் அஸ்வின், வருண் சக்கரவர்த்தியை நேர்காணல் செய்தார். அப்போது விஜயின் அரசியல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு வருண் சக்கரவர்த்தி, இதுவரை விஜய் செய்த அரசியல் நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கின்றன. விக்கிரவாண்டி மாநாடு மிகச்சிறந்த ஒன்றாக இருந்தது என்று தெரிவித்தார். அப்போது அஸ்வின் குறுக்கிட்டு, நிச்சயமாக தவெகவுக்கு ஓட்டு போடுவாய் தானே என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு வருண் சக்கரவர்த்தி, அதனை என்னால் வெளிப்படையாக சொல்ல முடியாது. என் மனதில் இன்னும் சில கட்சிகளும் இருக்கின்றன என்று பதில் அளித்துள்ளார். வருண் சக்கரவர்த்தியின் இந்த பதில் ரசிகர்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜயின் ரசிகராக இருந்தாலும், ரசிக மனநிலையில் வாக்களிக்க முடியாது என்ற வருண் சக்கரவர்த்தியின் உறுதி பல்வேறு தரப்பினர் மத்தியிலும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications