சிம்பு பட பாடலை.. விடாமல் "லூப்" மோடில் கேட்கும் விராட் கோலி.. எஸ்டிஆர் ரியாக்ஷனை பாருங்க
பெங்களூர்: இந்தாண்டு ஐபிஎல் தொடரில் பெங்களூர் அசுரப் பாய்ச்சலை நடத்தி வருகிறது. இதற்கிடையே பெங்களூரின் சோஷியல் மீடியா பக்கத்தில் விராட் கோலி தான் விரும்பி கேட்கும் பாடல் குறித்த தகவலைப் பகிர்ந்துள்ளார். சிம்பு படப் பாடலைத் தான் இப்போது அவர் லூப் முறையில் கேட்டு வருகிறாராம். கோலியின் இந்தப் பதிலுக்கு சிம்புவும் பதிலளித்துள்ளார். அதுவே இணையத்தில் இப்போது டிரெண்டாகி வருகிறது.
ஐபிஎல் தொடர் இப்போது சூடுபிடித்துள்ளது. டாப் 4 இடங்களைப் பிடித்து ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னே அணிகள் தீவிரமாக முயன்று வருகிறது. 10ல் 8 அணிகளுக்கு இன்னும் ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேற வாய்ப்பு இருக்கிறது. இன்னும் சில லீக் போட்டிகள் மட்டுமே ஒவ்வொரு அணிக்கும் இருப்பதால் களத்தில் அனல் பறக்கிறது.

ஆர்சிபி
இது ஒரு பக்கம் இருக்க ஐபிஎல் அணிகள் சோசிஷல் மீடியாக்களில் ஆக்டிவாக இருக்கிறார்கள். களத்திற்கு வெளியேயும் தங்கள் ரசிகர்களுடன் கனெக்டட்டாக இருக்க வேண்டும் என்பதற்காக ஐபிஎல் அணிகள் இந்த யுக்தியை கையில் எடுத்துள்ளன. இதில் பெங்களூரை நாம் தனியாகச் சொல்லத் தேவையில்லை. மற்ற அணிகளுக்கு முன்பிருந்தே சோஷியல் மீடியாவில் ஆர்சிபி ரொம்பவே ஆக்டிவாக இருக்கும். இந்த சீசனிலும் அது விதிவிலக்கு இல்லை.
கோலிக்கு பிடித்தது தமிழ் பாடல்
இதற்கிடையே ஆர்சிபி தனது சமூக வலைத்தள பக்கத்தில் கோலியின் பேட்டியின் ஒரு சின்ன பகுதியைப் பகிர்ந்துள்ளனர். அதில் இப்போது நீங்கள் அதிகம் கேட்கும் பாடல் எது கேள்வி கேட்கப்பட்டது. அதற்குச் சற்றும் யோசிக்காத விராட் கோலி, "இப்போது மிகவும் பிடித்த பாடலா... இதைக் கேட்டால் நீங்கள் ஷாக் ஆவீங்க.." எனச் சொல்லிக் கொண்டே தனது செல்போனை எடுத்து அந்தப் பாடலை ப்ளே செய்கிறார். அது வேறு எதுவும் இல்லை "நீ சிங்கம் தான்" பாடல் தான்.
பத்து தல
கடந்த 2023ல் வெளியான பத்து தல படத்தில் இடம்பெற்றிருந்த பாடல் தான் இது. ஜில்லுனு ஒரு காதல் படத்தை இயக்கிய கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு, கௌதம் கார்த்திக் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் பத்து தல. இதற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார். அந்தப் படத்தில் முக்கியமான தருணத்தில் சிம்புவுக்காக வரும் பாடல் தான் இந்த நீ சிங்கம் தான் பாட்டு.. ஏ.ஆர். ரஹ்மான் இசையில் இதை சித் ஸ்ரீராம் பாடியிருப்பார்.
இந்தப் பாடல் வெளியானது முதலே சமூக வலைத்தளங்களில் டிரெண்டிங்கில் இருக்கும். பல அரசியல் தலைவர்கள், கிரிக்கெட் வீரர்கள், சினிமா நடிகர்கள், பிரபலங்கள் ஆகியோருக்கு இந்தப் பாடலைப் பயன்படுத்துவார்கள். அவ்வளவு ஏன் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தோனி என்ட்ரி கொடுக்கும்போதும் கூட இந்தப் பாடலைத் தான் பல நேரங்களில் பயன்படுத்தியுள்ளனர்.
சிம்பு
இந்தப் பாடலைத் தான் இப்போது கோலி லூப் மோடில் கேட்டு வருகிறாராம். பெங்களூர் அணியின் இந்த போஸ்ட் இணையத்தில் டிரெண்டாகி வந்தது. இதற்கிடையே சிம்புவும் இந்த போஸ்டிற்கு ரியாக் செய்துள்ளார். விராட் கோலியை டேக் செய்து, "நீ சிங்கம் தான்" எனப் பதிவிட்டுள்ளார். அதுவும் இப்போது பலராலும் பகிரப்பட்டு வருகிறது. நீங்க சொல்லுங்க.. உங்களுக்கு இந்தப் பாடல் பிடிக்குமா!












Click it and Unblock the Notifications