ஆட்சியை பிடித்த “மூன்றெழுத்து மந்திரம்"! வெறும் 3%ல் இருந்து 5 ஆண்டுகளில் அதிபராகவே ஆன அநுர குமார!
கொழும்பு: 5 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த அதிபர் தேர்தலில் வெறும் 3.1 சதவீத வாக்குகளைப் பெற்ற அநுர குமார திசநாயக்க, 2024 ஜனாதிபதி தேர்தலில் இலங்கை மக்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்று, அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது அனைவரது புருவங்களையும் உயரச் செய்துள்ளது. இலங்கையில் "ஏகேடி" எனும் மூன்றெழுத்து மந்திரம் வென்றுள்ளது.
"தலைவன் யுகம் பொறக்குது.. மூணெழுத்து மந்திரத்த.. மீண்டும் காலம் ஒலிக்குது" - இது விஜய் அண்மையில் வெளியிட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் கொடிப் பாடலில் இடம்பெற்ற வரிகள். அண்ணா, எம்ஜிஆர் ஆகிய தலைவர்களுக்குப் பிறகு விஜய் எனும் மூன்றெழுத்து பெயர் தமிழக அரசியலின் திசைகளில் ஒலிக்கிறது எனச் சுட்டிக்காட்டும் விதமாக இந்த வரிகள் இடம்பெற்றன.

மூணெழுத்து மந்திரம்: இப்போது, நமது அண்டை நாடான இலங்கையில் 'AKD' எனும் மூன்றெழுத்து மந்திரம், மக்களின் மனங்களை வென்று ஆட்சியைப் பிடித்துள்ளது. இலங்கை அதிபர் தேர்தலில் வென்றுள்ளார் AKD என்று அழைக்கப்படும் அநுர குமார திசநாயக்க. கடந்த 2019 அதிபர் தேர்தலில் வெறும் 3 சதவீத வாக்குகளைப் பெற்ற 'ஏகேடி', 5 ஆண்டுகளில், தனது நிலையை பல மடங்கு உயர்த்தி சாதித்துக் காட்டியுள்ளார். எப்படி வென்றார் இந்த இடதுசாரி தலைவர்?
இலங்கையில் நடைபெற்று முடிந்துள்ள அதிபர் தேர்தலில் ஜனதா விம்முக்தி பெரமுன (JVP) - என்.பி.பி கூட்டணி ஆட்சியை கைப்பற்றியுள்ளது. ஜெவிபி தலைவர் அனுர குமார திசநாயக இலங்கையின் 9வது அதிபராகிறார். இலங்கையில் நடந்த பொருளாதார நிலையின்மை பிரச்சனைக்குப் பிறகு நடக்கும் முதல் அதிபர் தேர்தல் இது. இந்த தேர்தலில் வென்று அதிபர் ஆகி இருக்கும் அநுர மீது எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

2வது விருப்ப வாக்குகள்: அநுர குமார திசாநாயக இந்தத் தேர்தலில் 57,40,179 வாக்குகளைப் பெற்றுள்ளார். இலங்கை தேர்தல் வரலாற்றில் முதன்முறையாக இந்தத் தேர்தலில்தான் விருப்ப வாக்குகள் எண்ணப்பட்டன. இலங்கை ஜனாதிபதி தேர்தலில் எண்ணப்பட்ட வாக்குகளில் எந்தவொரு வேட்பாளரும் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெறாத நிலையில், இரண்டாவது விருப்ப வாக்குகள் எண்ணப்பட்டன.
இலங்கை ஜனாதிபதி தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தொடக்கம் முதலே தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த அநுர குமார திஸாநாயக்க முன்னிலையில் இருந்தார். அவருக்கு 42.31% வாக்குகள் கிடைத்தன. இரண்டாவது இடத்தில் இருந்த சஜித் பிரேமதாசவுக்கு 32.76% வாக்குகளும், மூன்றாவது இடத்தில் ரணில் விக்ரமசிங்கவுக்கு 17.27% வாக்குகளும் பதிவாகின.
எந்த வேட்பாளரும் 50% வாக்குகளை தாண்டாததால், இலங்கை ஜனாதிபதித் தேர்தல் வரலாற்றில் முதன்முறையாக இரண்டாவது விருப்ப வாக்குகள் எண்ணப்பட்டன. அதன்படி, இறுதியில், அநுர குமார திஸாநாயக்க - 57,40,179 வாக்குகள் பெற்றார். சஜித் பிரேமதாச - 45,30,902 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்தார். இலங்கை அதிபர் தேர்தலில் 38 பேர் போட்டியிட்ட நிலையில், வென்றுள்ளார் அநுர குமார திசநாயக்க.

முதல் முறையாக ஆட்சி பீடம்: இடதுசாரி கொள்கையை அடிப்படையாகக் கொண்ட கட்சி ஒன்று இலங்கையில் ஆட்சி பீடம் ஏறுவது இதுதான் முதல் முறை. இலங்கையில் ஏற்பட்ட பொருளாதாரச் சீர்கேட்டால் நாடே சின்னாபின்னமான சூழலை சரியாகப் பயன்படுத்தி ஆட்சிக்கு வந்திருக்கிறார் அநுர குமார. ஆட்சியாளர்கள் மீது மக்கள் கடும் கோபம் கொண்டிருந்த சூழலில் ஊழலுக்கு எதிரான முழக்கங்களை வைத்து வென்றிருக்கிறார் அநுர.
கூலித் தொழிலாளியின் மகன்: தம்புத்தேகம பகுதியில் ஒரு 1968ஆம் ஆண்டு ஒரு தினக்கூலி தொழிலாளிக்கு மகனாகப் பிறந்தவர் அநுர குமார திசநாயக்க. தம்புத்தேகம கமினி மகா வித்யாலயாவிலும் தம்புத்தேகம மத்திய கல்லூரியிலும் படித்த அநுர குமார திசநாயக்க, அங்கிருந்து பேராதனை பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். தனது 19வது வயதில் இலங்கையின் மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட் இடதுசாரிக் கட்சியான ஜனதா விமுக்தி பெரமுனவில் இணைந்தார்.
கடந்த 1995ஆம் ஆண்டு அவரை சோஷலிச மாணவர் அமைப்பின் தேசிய அமைப்பாளராக ஜே.வி.பி. நியமித்தது. 1998 ஆம் ஆண்டில் அக்கட்சியின் மத்திய பணிக் குழுவிலும் அவருக்கு இடம் அளிக்கப்பட்டது. கடந்த 2000ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஜனதா விமுக்தி பெரமுன சார்பில் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்குள் எம்.பியாக நுழைந்தார் அநுர குமார. 2001ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் வென்று எம்.பி ஆனார்.
அமைச்சர்: அதிபர் குமாரதுங்கா ஆட்சிக்கு ஆதரவு அளித்து வந்த ஜேவிபி, 2002 ஆம் ஆண்டு அவருடைய அரசு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் அமைதி பேச்சுவரத்தை மேற்கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து தங்களது ஆதரவை விலக்கிக்கொண்டனர். 2004 ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்சேவின் கட்சியுடன் கூட்டணி வைத்த ஜேவிபி விடுதலைப் புலிகளுடன் தாக்குதல் நடத்தாமல் இருப்பதற்கான சீஸ் ஃபயர் ஒப்பந்தத்தை எதிர்த்து தீவிரமாக பிரச்சாரம் செய்தது.
சந்திரிகா ஆட்சியில் அனுர திசநாயகவுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. ஆனால் ஒரு வருடம் கழிந்து அநுர குமார திசநாயாக அந்த பதவியை ராஜினாமா செய்தார். கடந்த 2014ஆம் ஆண்டு நடந்த ஜே.வி.பியின் தேசிய மாநாட்டில், அக்கட்சியின் புதிய தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார் அநுர குமார திசநாயக. 2015 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்டு வென்ற அனுர குமார திசநாயக பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவரானார்.
வெறும் 3.16% ஓட்டு: அதைத் தொடர்ந்து, மக்கள் விடுதலை முன்னணியில் இருந்து 2019ஆம் ஆண்டு தேசிய மக்கள் சக்தி உருவாக்கப்பட்டது. தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி 2019ஆம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் அநுர குமார திசநாயக்க முதல் தடவையாகப் போட்டியிட்டார். அப்போது வெறும் சுமார் 3.16 சதவீத வாக்குகளுடன் மூன்றாவது இடத்தையே பிடித்தார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் கோத்தபய ராஜபக்சே அதிபராக தேர்வான நிலையில், ஊழலுக்கு எதிராக அநுர குமார திசநாயக்க தொடர்ச்சியாகக் குரல் எழுப்பி வந்தார். இதனால், அவருக்கான ஆதரவுத்தளம் வலுவடைய ஆரம்பித்தது. மேலும் பொருளாதார நெருக்கடியின்போது நடந்த போராட்டங்களிலும் அநுர குமார முன்னணியில் இருந்தார்.
முன்வைத்த முழக்கம்: இலங்கை அரசில் புரையோடியுள்ள ஊழல் மற்றும் முறைகேடான நிர்வாக அமைப்பை முற்றிலுமாக மாற்றுவதாகத் தனது தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுத்த அநுர குமார திசநாயக, முந்தைய அரசுகள், இலங்கையின் பொருளாதாரத்தை சீரழித்ததைச் சுட்டிக்காட்டி, இந்த முறை எனக்கு வாய்ப்பு கொடுங்கள், நாட்டையே நான் மாற்றிக் காட்டுகிறேன் எனக் கூறி வாக்கு சேகரித்தார்.
நடந்து முடிந்த இலங்கை அதிபர் தேர்தலில், அநுர குமார திசநாயக்கவுக்கு ஆதரவாக பல்கலைக்கழக மாணவர்கள், அரசு ஊழியர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் திரண்டனர். ஊழலுக்கு எதிரான ஏகேடியின் குரல்கள் புதிய தலைமுறையினரை ஈர்த்தன. இலங்கையை சீரமைப்பதாக அநுர குமார திசநாயக கொடுத்த வாக்குறுதி அளித்த நம்பிக்கை இன்றைக்கு அவரை ஆட்சி அரியணையில் அமர்த்தி உள்ளது.












Click it and Unblock the Notifications