சிறையில் உள்ள 51 தமிழக மீனவர்களை விடுவிக்க முடிவு.. பேச்சுவார்த்தையில் இறங்கி வந்த இலங்கை
சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 51 பேரை விடுவிக்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.
கொழும்பு : சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 51 பேரை விடுவிக்க இலங்கை அரசு சம்மதம் தெரிவித்துள்ளது. கொழும்பு நகரில் நடைபெற்ற இந்தியா, இலங்கை அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில இழுவலைகளை பயன்படுத்தி மீன்பிடிப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் இலங்கை அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழக மீனவர்களை கைது செய்வது, அவர்களின் படகுகளை பறித்து செல்வது, மீனவர்களை கண்மூடித்தனமாக தாக்குவது என இலங்கை கடற்படை தொடர்ந்து அட்டூழியத்தில் ஈடுபட்டு வந்தது. இதனை தடுக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக மீனவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
இலங்கை கடற்படையால் பறித்து செல்லப்பட்ட படகுகள் மற்றும் இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும் என்றும் தமிழக மீனவர் சங்கங்கள் வலியுறுத்திவந்தனர். இந்நிலையில் தமிழக மீனவர்களின 114 படகுகளை இலங்கை அரசு அரசுடைமையாக்கியது.
இலங்கை அரசின் இந்த நடவடிக்கை தமிழக மீனவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இருநாட்டு மீனவர்கள் பிரச்சனை தொடர்பாக கொழும்புவில் இந்தியா - இலங்கை அமைச்சர்கள் மட்டத்திலான பேச்சு வார்த்தை இன்று நடைபெற்றது.

இந்தியா - இலங்கை பேச்சுவார்த்தை
இதில் இந்தியா சார்பில் மத்திய அமைச்சர் ராதாமோகன் சிங்கும் , இலங்கையின் மீன்வளத் துறை அமைச்சர் மகிந்த அமரவீரவும் கலந்து கொண்டனர். பேச்சுவார்த்தையின் போது தமிழக மீனவர்கள் 51 பேரை விடுவிக்க இலங்கை அரசு சம்மதம் தெரிவித்தது.

படகுகள் - பரிசீலிக்கப்படும்
அப்போது தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிப்பது குறித்து பரிசீலனை செய்யப்படும் என இலங்கை அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து கடற்பகுதியில் தமிழக மீனவர்கள் இழுவலைகளை பயன்படுத்தக்கூடாது என இலங்கை அரசு வேண்டுகோள் விடுத்தது.

மீனவர்கள் துன்புறுத்தல் - தவிர்க்க ஒப்பந்தம்
மேலும் கைது நடவடிக்கையின் போது தமிழக மீனவர்கள் துன்புறுத்தப்படுவதையும் உயிரிழப்பதையும் தவிர்க்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. கடற்பகுதியில் ரோந்து குறித்த ஒத்துழைப்பை அதிகரிக்கவும் இந்த பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டது.

ஏப்ரலில் அடுத்த கூட்டம்
இருநாட்டு கடலோர காவல்படையினரிடையே சீரான இடைவெளியில் பேச்சுவார்த்தை நடத்தப்படுவது என்றும் இந்த பேச்சு வார்த்தையின் போது ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அமைச்சர்கள் அளவிலான அடுத்த கூட்டம் வரும் ஏப்ரல் மாதம் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications