கொழும்பில் பிரதமர் மோடி... பழமையான சீமா மாலக்க பௌத்த கோயிலில் தரிசனம்!
இரண்டுநாள் பயணமாக இலங்கை சென்றுள்ள மோடி அங்குள்ள பழமையான சீமா மாலக்க பௌத்த கோயிலில் சிறப்பு தரிசனம் செய்தார்.
கொழும்பு: இலங்கையில் இரண்டு நாள் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி புத்த மதத்தினர் கொண்டாடும் புத்தரின் பிறந்தநாள், ஞானோதயம் பெற்ற நாள், உயிர் நீத்த நாள் ஆகிய மூன்றும் அடங்கிய 'வெசாக்' என்ற புத்த பூர்ணிமாவில் கலந்துகொண்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் அறிவித்துள்ள புத்த பூர்ணிமா கொண்டாட்டங்கள் இன்று தொடங்கி 3 நாட்கள் இலங்கையில் நடக்கிறது.இதில் உலகம் முழுவதும் இருந்தும் 100-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 400 முக்கிய பிரதிநிதிகள் பங்கேற்கிறார்கள்.

புத்த பூர்ணிமா திருவிழாவில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளார் இதில் பங்கேற்பதற்காக அவர் நேற்று கொழும்பு நகருக்கு புறப்பட்டுச் சென்றார். சர்வதேச 'வெசாக் தின' கொண்டாட்டங்களில் கலந்துகொள்ளவும், இந்திய நிதி உதவியுடன் கட்டப்பட்டுள்ள மருத்துவமனையைத் திறந்து வைக்கவும், தமிழர்களைச் சந்தித்துப்பேசவும் பிரதமர் நரேந்திர மோடி திட்டமிட்டுள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் மோடி, தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ' 2 ஆண்டுகளில் இரண்டாவது முறையாக இலங்கை செல்கிறேன். எங்களின் வலுவான உறவுக்கு இது அடையாளம். எனது பயணத்தின்போது, கொழும்பில் வெசாக் தின கொண்டாட்டங்களில் கலந்து கொள்கிறேன். மேலும், புத்த மதத் தலைவர்களுடன் கலந்துரையாடுகிறேன். அதிபர் சிறிசேனா, பிரதமர் ரனில் விக்ரம சிங்கே ஆகியோருடன் இந்த விழாவில் கலந்துகொள்வதை கெளரவமாகக் கருதுகிறேன்.
இந்தியாவின் நிதி உதவியுடன் கட்டப்பட்டுள்ள திக்கோயா மருத்துவமனையைத் தொடங்கி வைக்கிறேன். இந்திய வம்சாவளி தமிழ் சமூகத்தினருடன் கலந்துரையாடுகிறேன்' எனவும் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து தனி விமானத்தில்நேற்று கொழும்பு புறப்பட்டார். அங்கு சென்று சேர்ந்த அவரை, கட்டுநாயக்கா பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில்,இலங்கை பிரதமர் ரனில் விக்ரம சிங்கே வரவேற்றார்.
இதுபற்றி நரேந்திர மோடி, 'கொழும்புவுக்கு வந்தடைந்து விட்டேன். இலங்கைக்கு வந்தது மகிழ்ச்சியாக உள்ளது. இங்கே சர்வதேச வெசாக் கொண்டாட்டங்களில் கலந்து கொள்வேன்' என டுவிட்டரில் தமிழில் குறிப்பிட்டுள்ளார்.
வரவேற்பு நிகழ்ச்சியைத் தொடர்ந்து பிரதமர் மோடி, இலங்கை பிரதமர் ரனில் விக்ரம சிங்கேயுடன் கொழும்பு நகரில் உள்ள 120 ஆண்டு பழமையான கங்கராமய்யா கோவிலின் அங்கமாக திகழ்கிற சீமா மாலகா புத்த கோவிலுக்கு சென்றார். சர்வதேச வெசாக் தின கொண்டாட்டத்தின் பாரம்பரிய வழக்கப்படி, மோடி அந்த புத்த கோவிலின் கருவறைக்குள் சென்றார். அங்கு அவர் விளக்கு ஏற்றி வழிபட்டார்.
இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் 'இலங்கையில் எனது நிகழ்ச்சிகள் அமைதியும் நேர்மறை ஆற்றலும் நிரம்பிய சீமா மாலக்க பௌத்த கோவிலிற்கான ஒரு விஜயத்துடன் ஆரம்பிக்கிறது' என பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications