4 நாட்கள் பயணமாக இன்று இந்தியா வருகிறார் இலங்கை அதிபர் சிறிசேனா
கொழும்பு : இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா 4 நாள்கள் பயணமாக இன்று இந்தியா வருகிறார்.
இலங்கையின் புதிய அதிபராக பதவியேற்ற பின் மைத்ரிபால சிறிசேனா முதன்முறையாக இந்தியப் பயணம் மேற்கொள்கிறார். இன்று டெல்லி வந்து சேரும் சிறிசேனா, நாளை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முக்கிய தலைவர்களை சந்தித்து பேசுகிறார். அதனைத் தொடர்ந்து அவருக்கு ஜனாதிபதி விருந்து அளிக்கிறார்.
பின்னர், பிரதமர் மோடியுடன் இருதரப்பு உறவுகள் குறித்து சிறிசேனா பேச்சுவார்த்தை நடத்துகிறார். அப்போது இலங்கையில் தமிழர்களுடனான அமைதி மற்றும் நல்லிணக்க நடவடிக்கைகள், பொருளாதாரம் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து இருவரும் விவாதிக்கிறார்கள்.

17-ந்தேதி, பீகார் மாநிலத்தில் உள்ள புத்தகயாவுக்கும், ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கும் சிறிசேனா செல்கிறார். 18-ந்தேதி அவர் இலங்கைக்கு திரும்புகிறார்.
இத்தகவல்களை டெல்லியில் மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளும் ஆழமான பேச்சுவார்த்தை நடத்துவதில் ஆர்வமாக உள்ளன என்றும், இலங்கையில் வாழும் அனைத்து சமூகத்தினரிடையே உறுதியான நல்லிணக்கம் நிலவ புதிய இலங்கை அரசு நடவடிக்கை எடுக்கும் என்று இந்தியா நம்புவதாகவும் அவர் கூறினார்.
அதேபோல், தமிழ்நாட்டில் உள்ள இலங்கை தமிழ் அகதிகளை இலங்கைக்கு திருப்பி அனுப்புவது பற்றி கூறும்போது, ‘அதுபற்றி இந்தியாவும், இலங்கையும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன. தானாக வெளியேற விரும்புபவர்களை அனுப்புவது பற்றி கடந்த மாதம் பேச்சுவார்த்தை நடைபெற்றது' என்றார்.












Click it and Unblock the Notifications