தமிழக மீனவர்கள் 77 பேரை விடுதலை செய்ய இலங்கை உத்தரவு... படகுகளை விடுவிக்க மறுப்பு
கொழும்பு: இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் 77 பேரை விடுதலை செய்ய அந்நாட்டு அரசு முடிவு செய்து உள்ளது.
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதும், விரட்டியடிக்கப்படுவதும் தொடந்து நிகழ்ந்த வண்ணமே உள்ளது. கடந்த ஜுன் மற்றும் ஜூலை மாதங்களில் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்தனர்.
மேலும், எல்லை தாண்டி மீன்பிடித்ததாககூறி 77 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். அவர்களது படகுகளைபும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றனர்.
இதையடுத்து, கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கையில் உள்ள நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்பட்டு வவுனியா, நீர்க்கொழும்பு, யாழ்ப்பாணம் உள்ளிட்ட சிறைகளில் அடைக்கப்பட்டனர்.

போராட்டம்
இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுதலை செய்யக்கோரியும், இலங்கையில் உள்ள அனைத்து படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தியும் ராமேசுவரத்தில் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மத்திய-மாநில அரசின் நடவடிக்கை
இதையடுத்து, இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், அவர்களது படகுகளையும் விடுவிக்க முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தி வந்தார். இது குறித்து நடவடிக்கை மேற்கொண்ட மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தமிழக மீனவர்களை விடுதலை செய்ய இலங்கை அரசை கேட்டுக்கொண்டார்.

விடுவிக்க உத்தரவு
இந்நிலையில், இந்திய அரசின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட இலங்கை அரசு, அந்நாட்டில் சிறைகளில் உள்ள தமிழக மீனவர்கள் 77 பேரையும் விடுதலை செய்ய உத்தரவிட்டது.

முதற்கட்டமாக விடுதலை
முதற்கட்டமாக யாழ்ப்பாணம் சிறையில் இருந்த ராமேஸ்வரம், நாகப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 43 மீனவர்கள் ஊர்க்காவல் துறை நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் 43 பேரையும் விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார். இதேபோல் நீர்க்கொழும்பு சிறையில் இருந்த பாம்பன் மீனவர்கள் 6 பேர் கல்பிட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர்.

28 பேர் இன்று விடுதலை
இதையடுத்து, வவுனியா சிறையில் உள்ள 28 மீனவர்கள் இன்று மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விடுதலை செய்யப்பட உள்ளனர். ஆனால் இலங்கையில் உள்ள தமிழக மீனவர்களின் 102 படகுகளை விடுவிப்பது குறித்து எந்த உத்தரவும் இல்லை.

தமிழகம் வருகை
இலங்கை சிறையில் இருந்த விடுதலை செய்யப்பட்டதையடுத்து, அவர்கள் 49 பேரும் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் விரைவில் தமிழகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications