இலங்கை அதிபர் தேர்தல்: எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக மைத்ரிபால சிறிசேன- ராஜபக்சே அதிர்ச்சி!!
கொழும்பு: இலங்கையில் ஜனவரி மாதம் நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் ராஜபக்சேவை எதிர்த்து அவரது சொந்த கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளராக இருந்த மைத்ரிபால சிறிசேனவை எதிர்க்கட்சிகளின் ஒன்றுசேர்ந்து பொதுவேட்பாளராக களம் இறக்குவதாக அறிவித்துள்ளன.
இலங்கையில் அதிபர் தேர்தல் நடைபெற இன்னும் 2 ஆண்டுகாலம் இருக்கிறது. இருப்பினும் அதிபர் ராஜபக்சே அடுத்த ஆண்டு ஜனவரி மாதமே தேர்தலை நடத்த தீர்மானித்துள்ளார்.
இத்தேர்தலில் 3வது முறையாக ராஜபக்சே போட்டியிடுவதாகவும் அறிவித்துள்ளார். இந்த நிலையில் ராஜபக்சேவுக்கு எதிராக பொதுவேட்பாளரை களம் இறக்க எதிர்க்கட்சிகள் தீவிரமாக வியூகம் வகுத்தன.

இதில் முன்னாள் அதிபர் சந்திரிகா முக்கியப் பங்காற்றி வந்தார். இந்த நிலையில் கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர்களின் சந்திப்பின் போது ராஜபக்சேவின் சொந்த கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளராகவும் ராஜபக்சே அரசில் சுகாதாரத்துறை அமைச்சராகவும் இருந்த மூத்த தலைவர் மைத்ரிபால சிறிசேன, தம்மை அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து பொதுவேட்பாளராக களம் இறக்கியுள்ளதாக அறிவித்தார்.
அத்துடன் ராஜபக்சே குடும்பத்தின் ஆதிக்கத்தையும் ஊழல்களையும் எதிர்த்து மைத்ரிபால சிறிசேனவுக்கு ஆதரவாக ஆளும் கட்சியைச் சேர்ந்த பல அமைச்சர்களும் ராஜபக்சே அரசைவிட்டு விலகியும் உள்ளனர்.
இன்றைய செய்தியாளர் சந்திப்பில் சந்திரிகா குமாரதுங்கவும் கலந்து கொண்டார். மேலும் தம்மை பொதுவேட்பாளராக தேர்வு செய்த ரணில் விக்கிரமசிங்கே, சந்திரிகா ஆகியோருக்கு மைத்ரிபால சிறிசேன நன்றி தெரிவித்துக் கொண்டார்.
தாம் அதிபராக வெற்றி பெற்றால் நாட்டின் பிரதமராக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கே நியமிக்கப்படுவார் என்றும் மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.
அத்துடன் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றவுடன் அதிபருக்கு அனைத்து அதிகாரங்களையும் அளிக்கும் முறை ஒழிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
40 ஆண்டுகாலத்துக்கும் மேலாக ராஜபக்சே கட்சியில் இருந்த மூத்த தலைவர் ஒருவரையே எதிர்க்கட்சிகள் பொதுவேட்பாளராக அறிவித்திருப்பது ராஜபக்சேவுக்கு அதிர்ச்சியையும் கடும் நெருக்கடியையும் ஏற்படுத்தியுள்ளது என்கின்றன இலங்கை வட்டாரங்கள்.












Click it and Unblock the Notifications