பொங்கல் சிறப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்கம்- சொந்த ஊர் செல்ல ஒரு லட்சம் பேர் முன்பதிவு
பொங்கல் பண்டிகைக்காக, சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் பயணிகளின் வசதிக்காக இன்று முதல் 3 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
சென்னை: பணிக்காகவும், படிப்பிற்காகவும் சென்னைக்கு வந்தவர்கள் பண்டிகை நாட்களில் சொந்த ஊர் செல்வது வாடிக்கை. தீபாவளி, பொங்கல் பண்டிகைகளை சொந்த பந்தங்களுடன் கொண்டாடுவதற்காக பேருந்து, ரயில்களில் முன்பதிவு செய்வார்கள்.
சென்னை நகரத்திலிருந்து பொங்கல் பண்டிக்கைக்கு தங்கள் சொந்த ஊர்களுக்கு மக்கள் சிரமம் இல்லாமல் செல்வதற்காக சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள்இயக்கப்படுகின்றன.
சென்னையில் ஐந்து பேருந்து நிலையங்களிலிருந்து சிறப்பு பேருந்துகள் இன்று முதல், ஜனவரி 13 ஆம் தேதி வரை இயக்கப்படுகின்றன. இந்த ஐந்து பேருந்து நிலையங்களிலும் கூடுதலாகமாநகர பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

சிறப்பு பேருந்துகள்
சென்னையில் இருந்து இன்று 3069 பேருந்துகளும், 12ஆம் தேதி 4054 பேருந்துகளும் இயக்கப்படும் என போக்குவரத்துக் கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 13ஆம் தேதி 4,147 பேருந்துகளும், பிற பகுதியில் இருந்து 3 நாட்களுக்கு 6,423 பேருந்துகளும் இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கோயம்பேடு பேருந்து நிலையம்
கோயம்பேட்டில் இருந்து திருச்சி, மதுரை, நெல்லை, தூத்துக்குடி, குமரி, விழுப்புரம், கோவைக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஆந்திராவுக்கு அண்ணா நகர் மேற்கில் இருந்தும், புதுச்சேரி, கடலூர், சிதம்பரத்துக்கு அடையாறில் இருந்தும் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. ஆற்காடு, ஆரணி, வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூருக்கு பூந்தமல்லியில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கும்பகோணம், தஞ்சாவூர் வழியாக செல்லும் பேருந்துகள் தாம்பரம் சானிடோரியத்தில் இருந்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்பதிவு
பொங்கல் சிறப்பு பேருந்துகளுக்காக 29 சிறப்பு முன்பதிவு மையங்கள் செயல்படுகின்றன. www.tnstc.in என்ற இணையதள முகவரியில் பேருந்துக்கு முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும், புகார் மற்றும் தகவல்களுக்கு 044 24794709 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனவும் தமிழக அரசு போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது.

ஒரு லட்சம் பேர் முன்பதிவு
சிறப்பு பேருந்துகளில் முன்பதிவு செய்வதற்கு ,கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 26 கவுன்ட்டர்களும், தாம்பரம் சானிட்டோரியம் பேருந்து நிலையத்தில் 2கவுன்ட்டர்களும், பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் ஒரு கவுன்ட்டரும் திறக்கப்பட்டன. இதில், முதல்நாள் 5,500 பேர் முன்பதிவு செய்தனர். இதுதவிர,முன்பதிவு செய்யும் காலமான 60 நாட்களில் 11, 12 மற்றும் 13 தேதிகளில் 95 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.

11,270 சிறப்பு பேருந்துகள்
இதில், சென்னையிலிருந்து செல்வதற்கு 63ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். வழக்கமாக இயக்கப்படும் 2,275 பேருந்துகள்,794 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 3069 பேருந்துகள் நாளை சென்னையின் ஐந்து பேருந்து நிலையங்களிலிருந்துஇயக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தமாக மூன்று நாட்களிலும் சேர்த்து 11 ஆயிரத்து, 270 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.

அறிவிப்பு
பயணிகள் எந்த பேருந்து நிலையத்திலிருந்து பேருந்து ஏற வேண்டும் என்பது குறித்து செல்போன் மூலம் குறுஞ்செய்திஅனுப்பப்படும் என்று போக்குவரத்து துறை அதிகாரி கூறியுள்ளார். இது குறித்த விவரங்களை பெறுவதற்கு 24 மணி நேரமும் உதவி மையம் செயல்படும்.கோயம்பேட்டில் டிஜிட்டல் விளம்பர பலகை வைக்கப்பட்டு தகவல்கள்அறிவிக்கப்படும். பயணிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சென்னை திரும்ப சிறப்பு பேருந்துகள்
பொங்கல் பண்டிகை முடிந்த பின் மீண்டும் ஊர் திரும்புவதற்கு 15 ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை சென்னை மற்றும் பிற பகுதிகளுக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

போக்குவரத்து நெரிசல்
பொங்கல் பண்டிகை கொண்டாட தென் மாவட்டங்களுக்கு இன்று முதல் செல்பவர்கள் செவ்வாய்கிழமை அதிகாலையில் சென்னைக்கு திரும்புவார்கள். மொத்தமாக ஒரே நாளில் ஊர் திரும்புவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். இதனை தடுக்க தமிழக அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பயணிகளின் கோரிக்கையாகும்.












Click it and Unblock the Notifications