டுவிட்டருடன் கூட்டணி அமைத்த தேர்தல் கமிஷன்... 100 சதவீத ஓட்டுக்காக!
சென்னை: சட்டசபை தேர்தலுக்காக அரசியல் கட்சியினர் ஆள் ஆளுக்கு கூட்டணி அமைத்து பேச்சு வார்த்தை நடத்தி வரும் நிலையில், வாக்காளர்களை 100 சதவிகிதம் ஓட்டு போட வைப்பதற்காக டுவிட்டருடன் கூட்டணி வைத்துள்ளது தேர்தல் ஆணையம்.
ஓட்டு போடாமல் தூங்குபவர்களை எழுப்ப அலெர்ட் மெசேஜ் அனுப்பும் டுவிட்டர். ஓட்டு போட்டு விட்டதாக போட்டோவுடன் டுவிட்டரில் பதிவு செய்பவர்களுக்கு திரைப்பட நட்சத்திரங்களின் கையெழுத்து போஸ்டரும் அனுப்பப்படுமாம்.

டுவிட்டரில் மீம்ஸ்
இளையதலைமுறையினர் பலரும் இன்று டுவிட்டரில்தான் குடியிருக்கிறார்கள். அவர்களை கவர தேர்தல் ஆணையமும் மீம்ஸ் போட்டு கலக்குகிறது. வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்கிறதா என்பதை பார்ப்பதில் தொடங்கி பல விழிப்புணர்வு பிரச்சாரங்களை செய்து வருகிறது தேர்தல் ஆணையம்.

100 சதவிகித ஓட்டு
தமிழக சட்டசபை தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவு என்ற நோக்கத்தை முன்வைத்து சமூக வலைதளங்களில் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

டுவிட்டருடன் ஒப்பந்தம்
அதன் ஒரு பகுதியாக டுவிட்டரில் தேர்தல் விழிப்புணர்வு பிரசாரம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக டுவிட்டர் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது. சென்னை தலைமை செயலகத்தில், தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியை , டுவிட்டர் இந்திய பிரிவு தலைவர் ரஹீல்குர்ஷித் சந்தித்து பேசினார்.

டுவிட்டர் நினைவூட்டும்
ஓட்டுப்பதிவு தினத்தன்று டுவிட்டர் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு நினைவூட்டல் செய்தி அனுப்பப்படும். யாரெல்லாம் நான் வாக்குப்பதிவு செய்து விட்டோம் என்று டுவிட்டரில் பதிவு செய்கிறார்களோ அவர்களுக்கு திரைப்பட நட்சத்திரங்கள் கையெழுத்து போஸ்டர்கள் அனுப்பப்படும்.

விழிப்புணர்வு வீடியோக்கள்
டுவிட்டர் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு தேர்தல் தேதி அறிவிக்க சிறப்பு வசதி ஏற்படுத்தப்படும்.தேர்தல் விழிப்புர்ணவு தொடர்பான வீடியோக்களையும் டுவிட்டரில் பார்த்திட ஏற்பாடு செய்யப்படும்.

வாக்காளர்களுக்கு வசதி
அனைத்து பிரிவு மக்களையும் எளிதாக சென்றடைய டுவிட்டரை பயன்படுத்த திட்டமிட்டுள்ளோம்.100 சதவீத ஓட்டுப்பதிவை உறுதி செய்ய டுவிட்டர் உதவும் என்றும் டுவிட்டர் மூலம் இளைய தலைமுறையினரை கவர முடியும் என்றும் ராஜேஸ் லக்கானி கூறியுள்ளார்.

இந்த கூட்டணி ஜெயிக்குமா?
என்னதான் விழிப்புணர்வை ஏற்படுத்தினாலும் தேர்தல் தினத்தன்று லீவ் கிடைத்ததே என்று உறங்கப் போய்விடுவார்கள் சிலர். இதில் 100 சதவிகித வாக்குப்பதிவு எப்படி வரும்? டுவிட்டர், தேர்தல் கமிஷன் கூட்டணி ஜெயிக்கிறதா என்று பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications