Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மதுரை குப்பைத் தொட்டியில் 11 வெடிகுண்டுகள்.. தயாரித்தது பயங்கர ரவுடி அப்பள ராஜா... போட்டது கூட்டாளி!

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரை அண்ணா நகரில் குப்பைத் தொட்டி ஒன்றிலிருந்து அடுத்தடுத்து 11 நாட்டு வெடிகுண்டுகள் சிக்கியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த குண்டுகளைத் தயாரித்தவர் தற்போது சென்னை சிறையில் அடைக்கப்பட்டுள்ள அதி பயங்கர ரவுடியான அப்பள ராஜா என்பவர் என்று தெரிய வந்துள்ளது.

இந்த ரவுடி பல கொலைகளில் தொடர்புடையவர். அதிலும் மதுரையில் வீடு புகுந்து 3 இளைஞர்களை துடிக்கத் துடிக்க கொடூரமாக வெட்டிக் கொன்றவர் இந்த அப்பள ராஜா. மிகப் பயங்கரமான ரவுடியான இவர் பூந்தமல்லியில் குமரன் என்பவரைக் கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

11 country bombs found in garbage box in Madurai

கூலிப்படையாக இயங்கி வந்த அப்பள ராஜாதான் மதுரையில் தற்போது சிக்கிய நாட்டு வெடிகுண்டுகளைத் தயாரித்தவர் என்று தெரிய வந்துள்ளது. மொத்தம் 20 வெடிகுண்டுகளை அவர் தயாரித்துள்ளார். அதில் 11 குண்டுகளை தனதுகூட்டாளியான இஸ்மாயில் என்பவரிடம் கொடுத்துள்ளார். ஆனால் போலீஸாருக்குப் பயந்து இஸ்மாயில் இந்தக் குண்டுகளை குப்பைத் தொட்டியில் போட்டுள்ளார். அதைத்தான் தற்போது போலீஸார் கண்டுபிடித்துள்ளனர் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

அண்ணா நகர் கிழக்குத் தெருவில் உள்ள குப்பைத் தொட்டியில் இன்று குப்பை போடுதவற்காக ஒருவர் வந்துள்ளார். அப்போது அதில் ஒரு பெரிய பை இருந்ததைப் பார்த்த அவர் அதை எடுத்துள்ளார். பிரித்துப் பார்த்தபோது நாட்டு வெடிகுண்டுகள் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர் அதை அங்கேயே வைத்து விட்டு போலீஸாருக்குத் தகவல் கொடுத்தார்.

போலீஸார் மோப்ப நாய்கள், வெடிகுண்டு நிபுணர்களுடன் விரைந்து வந்தனர். அந்தப் பையை எடுத்துப் பிரித்துப் பார்த்தபோது மொத்தம் 11 குண்டுகள் இருந்தது தெரிய வந்தது. இந்த சம்பவத்தால் மதுரையில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விவகாரம் குறித்து கியூ பிரிவு, சிறப்பு புலனாய்வுப் படை மற்றும் உள்ளூர் போலீஸார் இணைந்து விசாரணையில் இறங்கினர்.

அவர்களின் விசாரணையில்தான் அப்பள ராஜாவுக்கு இதில் உள்ள தொடர்பு தெரிய வந்ததாக கூறப்படுகிறது.

யார் இந்த அப்பள ராஜா?

மதுரை ஜெய்ஹிந்து புரத்தில் செப்டம்பர் 18ம் தேதி ஒரு கும்பல் வீடு புகுந்து 3 இளைஞர்களை சரமாரியாக வெட்டிக் கொன்றது. அவர்கள் அவுட் கார்த்தி, பாம்பு நாகராஜ் மற்றும் கருப்பு மணி ஆகியோர். இதில் முதல் இருவரும் ரவுடிகள் ஆவர். திமுகவையும் சேர்ந்தவர்கள்.

முன்விரோதம் காரணமாக இந்தக் கொலை நடந்தது தெரிய வந்தது. இவர்களைக் கொலை செய்தது அப்பள ராஜா கும்பல் என்பதையும் போலீஸார் கண்டுபிடித்தனர். அப்பள ராஜாவும் திமுகவைச் சேர்ந்தவர்தான். 9வது வட்ட திமுகவைச் சேர்ந்தவர் இவர்.

இதேபோல மேலும் பல பயங்கரக் கொலைச் சம்பவங்களில் அப்பள ராஜாவுக்குத் தொடர்பு இருப்பதாக போலீஸார் கூறுகி்ன்றனர். மதுரை தவிர தமிழகத்தின் பல்வேறு காவல் நிலையங்களில் அப்பள ராஜா மீது 20க்கும் மேற்பட்ட கொலை, கட்டப் பஞ்சாயத்து வழக்குகள் நிலுவையிலும் உள்ளன.

மதுரை போலீஸாரிடம் சிக்காமல் சுதந்திரமாக வலம் வந்த அப்பள ராஜா, எல்லை தாண்டி சென்னை பூந்தமல்லியில் குமரன் என்பவரைக் கொலை செய்து, அந்த வழக்கில் சிக்கி கைதாகி தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாராம்.

மதுரையில் குண்டு சிக்குவது முதல் முறையல்ல

மதுரையில் இப்படி அதிக அளவில் வெடிகுண்டுகள் சிக்குவது இது முதல் முறையல்ல.

இதற்கு முன்பு கடந்த மே மாதம் மதுரை நகரின் பல்வேறு இடங்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பைப் குண்டுகள், டிபன் பாக்ஸ் குண்டுகள், டைமர் குண்டுகள் சிக்கி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

அதேபோல கடந்த பிப்ரவரி மாதம் மதுரை மாட்டுத்தாவணி அருகே உத்தங்குடியில் உள்ள பிரபல நிறுவனத்தின் சூப்பர் மார்க்கெட்டின் பின்புறம் பைப் வெடிகுண்டு கைப்பற்றப்பட்டது.

அது மிகவும் சக்தி வாய்ந்ததாகும். பின்னர் அது பாதுகாப்புடன் செயலிழக்க வைக்கப்பட்டது.

ஏற்கனவே முன்பு பாஜக தலைவர் அத்வானி மதுரை திருமங்கலம் வழியாக செல்லவிருந்த நிலையில் பாலத்திற்குக் கீழ் குண்டு வைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இப்போது நாட்டு வெடிகுண்டுகள் குப்பைத் தொட்டியில் சிக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+