ராஜபக்சே சொன்னபடி 11 மீனவர்கள் விடுதலை
ராமேஸ்வரம்: நல்லுறவு அடிப்படையில் ராஜபக்சே வெளியிட்ட அறிவிப்பின் எதிரொலியாக இலங்கை சிறையில் அடைக்கப்பட்ட 11 மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
நரேந்திரமோடி பிரதமர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க டெல்லி வந்த இலங்கை அதிபர் ராஜபக்சே, வருவதற்கு முன்பாக, பாகிஸ்தான் பாணியில் இந்தியா - இலங்கை நட்புறவு அடிப்டையில் இலங்கை சிறையில் இருக்கும் தமிழக மீனவர்கள் அனைவரையும் விடுவிக்க உத்தரவிட்டார்.
இதையடுத்து, சுமார் இரண்டரை ஆண்டுகள் இலங்கை வெலிக்கடை சிறையில் விசாரணை கைதிகளாக அடைக்கப்பட்டிருந்த தங்கச்சிமடம் மீனவர்கள் 5 பேரையும் நேற்று காலை கொழும்பு கோர்ட் விடுதலை செய்து உத்தரவிட்டது.
இதேபோல் கடந்த 2013 ஆம் ஆண்டு இலங்கை கடற்படையால் பாம்பன், தங்கச்சிமடம் மற்றும் ராமேஸ்வரம் பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டு, யாழ்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் 6 பேரும் இலங்கை அரசால் நேற்று விடுதலை செய்யப்பட்டனர்.
மற்றொரு சம்பவத்தில் 2011 இல் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த வேதாரண்யம் மீனவர்கள் சரவணன், மனோகரன், செந்தில் ஆகிய மூவரையும் தலா ரூபாய் 25 ஆயிரம் அபராதம் விதித்து நேற்று காலை யாழ்பாணம் கோர்ட் விடுதலை செய்து உத்தரவிட்டது.
ஆனால், அபராதத்தை ரத்து செய்ய வலியுறுத்தி யாழ்பாணத்திலுள்ள இந்திய தூதரக அதிகாரிகள் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளனர். இதனால் மூன்று மீனவர்களும் அபராதமின்றி விரைவில் விடுதலையாவார்கள் என்று கூறப்படுகிறது.
விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரும் இன்று இந்திய தூதரக அதிகாரிகளிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டு தாயகம் திரும்ப உள்ளனர்.
மீனவர்கள் விடுதலையான தகவல் கிடைத்ததை தொடர்ந்து, ராமேஸ்வரம் கடற்கரையில் மீனவர்கள் ஒன்றுகூடி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டனர்.












Click it and Unblock the Notifications