ஜெயலலிதா 70வது பிறந்தநாள்: 1500 சிறை கைதிகள் இன்று விடுதலை
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு மாநிலம் முழுவதும் 1,500 சிறை கைதிகளை விடுதலை செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் மதுரை, திருச்சி, கோவை உட்பட்ட நகரங்களில் 9 மத்திய சிறைச்சாலைகள், மற்றும் 126 கிளை சிறைகள் உட்பட 135 சிறைகள் உள்ளன. இதில் 19 ஆயிரம் ஆண், பெண் கைதிகள் உள்ளனர். இவர்கள் ஆயுள் தண்டனை, மரண தண்டனை, கடுங்காவல், சாதாரண சிறை தண்டனைகள் விதிக்கப்பட்டு சிறையில் உள்ளனர்.
ஏராளமான கைதிகள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளனர்.

பத்து ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ள கைதிகள், முக்கிய அரசியல் தலைவர்களின் பிறந்தநாள் விழாக்களில், நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்யப்படுவது வழக்கம். ஆனால் இந்த நடைமுறை கடந்த சில ஆண்டுகளாக இல்லாமல் இருந்தது.
இதனால், தமிழகத்தில் உள்ள எதிர்க்கட்சி தலைவர்கள், சிறைகளில் 10 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை அனுபவித்து வரும் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.
இந்த நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் 31ம் தேதி திண்டுக்கல்லில் நடந்த எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், தமிழக சிறையில் ஆயுள்தண்டனை பெற்று 10 ஆண்டுகளுக்கு மேல் சிறைவாசம் அனுபவித்து வந்த சிறைக் கைதிகளை சட்டத்துக்கு உட்பட்டு மற்றும் சிறை விதிகளுக்கு உட்பட்டு மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்ய அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று முதல்வர் அறிவித்தார்.
இன்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு, மாநிலம் முழுவதும் சிறைகளில் உள்ள 1,500 பேரை விடுதலை செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்பேரில் மதுரையில் 340, பாளையங்கோட்டையில் 300 என மாநிலம் முழுவதும் 1,500 கைதிகள் விடுதலை செய்யப்படுவர். ஆனால் இதுவரை எங்களுக்கு அரசு ஆணைக்கான உத்தரவு வரவில்லை. அந்த உத்தரவு வந்த உடன் விடுதலை செய்யப்படுவார்கள் என்று சிறைத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications