தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கத்துக்கு எதிரான வழக்கு விசாரணை நவ.2-க்கு ஒத்திவைப்பு
தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
சென்னை : சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடங்கிய 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு வரும் நவம்பர் 2-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்றாவது தீர்ப்பு வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில் வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
முதல்வரை மாற்ற வேண்டும் என்று ஆளுநரிடம் கடிதம் கொடுத்தது தொடர்பாக தினகரன் தரப்பு எம்எல்ஏக்கள் 18 பேரை சபாநாயகர் தகுதிநீக்கம் செய்தார். இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

கடந்த செப்டம்பர் மாதம் 20ஆம் தேதி விசாரணைக்கு வந்த வழக்கில் 18 பேரின் மனுவுக்கு பதிலளிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டிருந்தார். அதன் படி கடந்த 4ஆம் தேதி விசாரணைக்கு வந்த அந்த வழக்கில் 500 பக்கங்கள் கொண்ட பதில் மனுவை சபாநாயகர் தரப்பு நீதிபதியிடம் தாக்கல் செய்தது.
இந்நிலையில் அன்றைய தினம் காலை முதலே அரசு தரப்பும், தினகரன் தரப்பும் சூடான விவாதங்கள் முன்வைத்தனர். அந்த வழக்கு விசாரணையை நீதிபதி 9-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார். அதன்படி அந்த வழக்கானது இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
டிடிவி தினகரன் தரப்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி வாதத்தை முன்வைத்தார். முதல்வர் சார்பில் வழக்கறிஞர் வைத்தியநாதன் வாதாடினார். 18 பேரை தகுதிநீக்கம் செய்த சபாநாயகரின் உத்தரவு செல்லுமா என்பது தொடர்பான வழக்கை வரும் நவம்பர் 2-ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.
அக்.23-ஆம் தேதிக்குள் டிடிவி தினகரன் தரப்பு, முதல்வர், சபாநாயகர் உள்ளிட்டோர் தரப்பு ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது. அதுவரை தகுதிநீக்க உத்தரவு தொடரும் என்றும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்காக விதிக்கப்பட்ட தடையும் தொடரும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications