18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் இன்று தீர்ப்பு... அடுத்து நடக்கப் போவது இவைதான்!
எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு வரும் நிலையில் அடுத்து என்ன நடக்கும் என்பதுதான் பெரும் எதிர்பார்ப்பு.
Recommended Video

சென்னை: தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று பகல் 1 மணிக்கு தீர்ப்பு வழங்க இருக்கிறது. இத்தீர்ப்பு எப்படியானதாக இருக்கும்? என்ன அரசியல் தாக்கங்களை ஏற்படுத்தும் என்பது பெரும் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மாற்றக் கோரி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேர் ஆளுநரிடம் மனு அளித்தனர். இதனையடுத்து 18 பேரையும் தகுதி நீக்கம் செய்வதாக சபாநாயகர் தனபால் அறிவித்தார்.

இதை எதிர்த்து தொட்ரப்பட்ட வழக்கில் இன்று பகல் 1 மணிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது. தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் அடங்கிய பெஞ்ச் இத்தீர்ப்பை அளிக்கிறது.
18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செல்லும் என தீர்ப்பளிக்கப்பட்டால் 18 தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது. அதே நேரத்தில் தீர்ப்பை எதிர்த்து 18 பேரும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யக் கூடும்.
18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செல்லாது என அறிவித்தால் ஆளும் முதல்வர் எடப்பாடி தலைமையிலான அதிமுக அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்படும். ஏனெனில் இந்த 18 எம்.எல்.ஏக்களுடன் சுயேட்சை எம்.எல்.ஏ. தினகரன் உள்ளிட்ட குறைந்தது 5 அல்லது 7 எம்.எல்.ஏக்கள் அரசுக்கு எதிராக உள்ளனர். அதனால் எடப்பாடி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய நெருக்கடிக்குத் தள்ளப்படும். அப்படி நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றால் எடப்பாடி அரசு பெரும்பான்மையை இழக்க நேரிடும் நிலை உள்ளது.
தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் இருவரும் மாறுபட்ட தீர்ப்பை அளிக்க நேரிட்டால் மீண்டும் மற்றொரு பெஞ்ச் விசாரித்து தீர்ப்பளிக்கும். அப்படியான ஒரு நிலை உருவானால் அந்த பெஞ்ச் தீர்ப்பு வரும் வரை ஆட்சிக்கு பாதிப்பு ஏற்படாது. இதுதான் தற்போதைய நிலையாக உள்ளது.












Click it and Unblock the Notifications